உயர் அதிகாரியின் மனைவியை நடை பயிற்சிக்கு அனுமதிக்காததால் இடமாற்றப்பட்ட பொலிஸ் அதிகாரி
கொழும்பு மருதானையில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியை கோவிட் பரவலைக் காரணம் காட்டி நடைபயிற்சிக்கு அனுமதிக்காத பொலிஸ் உறுப்பினர் ஒருவர் சில நிமிடங்களில் மாற்றுச்சோதனை சாவடிக்கு இடமாற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
மருதானை ஆனந்தா கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி கடமையில் இருந்தவேளையில் உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி பொரல்லையை நோக்கி நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். சோதனை சாவடியை கடக்கும்போது பொலிஸ் உறுப்பினர் அவரை தொடர்ந்தும் சோதனை சாவடியை கடந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
இதன்போது தாம் பொலிஸ் உயர்அதிகாரியின் மனைவி என்றும் தமக்கு அனுமதி வேண்டும் என்று அந்த பெண் கூறியபோது பொலிஸ் உறுப்பினர் தனிமைப்படுத்தல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்றுக்கூறி அவரை வீட்டுக்கு திரும்பிச்செல்லுமாறு கூறியுள்ளார்.
எனினும் அதனை ஏற்க மறுத்த பெண், அந்த இடத்தில் இருந்தே தமது கணவரான பொலிஸ் உயரதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விடயத்தைக் கூறியதுடன் அவரை கடமையில் இருந்த பொலிஸ் உறுப்பினருடன் தொலைபேசியில் பேசச் செய்துள்ளார்.
இதன்போது பொலிஸ் உயரதிகாரி, பொலிஸ் உறுப்பினரிடம் நடைப்பயிற்சிக்கு செல்பவர் தமது மனைவி என்றும் அவரை சோதனை சாவடியை தாண்டிச்செல்ல அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் அவரை அனுமதித்தால் ஏனையோரும் அதனையே பின்பற்றுவர் என்று பொலிஸ் உறுப்பினர், பொலிஸ் உயரதிகாரியிடம் தொலைபேசியின் ஊடாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் உறுப்பினரின் பேச்சையும் மீறி உயரதிகாரியின் மனைவி பொரல்லையை நோக்கி நடைப்பயிற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் குறித்த சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் உறுப்பினருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவரை உடனடியாகவே புஞ்சிப்பொரல்லை சோதனைச் சாவடிக்கு கடமைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ஏனைய உயர் பொலிஸ் அதிகாரிகள் மேலிடத்துக்கு வழங்கிய தகவல் காரணமாக புஞ்சிப்பொரல்லை சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்ட பொலிஸ் உறுப்பினர் மீண்டும் பழைய சோதனைச் சாவடிக்கே மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் சிரேஸ்ட காவல்துறை அதிபர் ஒருவரின் தலைமையில்
விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்