தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைப் தொடருந்து திணைக்களத்தின் சாரதிகளுக்கு அநீதி நேர்ந்தால் சில தொடருந்து பாதைகளின் சேவைகளில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா தொடருந்து , அண்மையில் கல்லோயா பிரதேசத்தில் காட்டு யானைகள் மீது மோதியதில் ஐந்து யானைகள் பலியாகியிருந்தன.
இதனையடுத்து குறித்த தொடருந்து சாரதிக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காட்டுயானைகள்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தொடருந்து லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் (தொடருந்து சாரதிகள்) சங்கம், அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் ஒருசில தொடருந்து பாதைகளின் சேவைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.
குறிப்பாக காட்டுயானைகள் கூடுதலாக உலவும் மஹவ-கல்ஓயா, கல்ஓயா-திருகோணமலை வரையான தொடருந்து பாதைகளில் தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் யானைகள் மோதலைத் தடுக்க விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத நிலையில், தொடருந்து சாரதிகளை மட்டும் பழிசொல்வது ஏற்புடையதல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |