கடந்த 10 ஆண்டுகளில் 316 பேர் பலி.. கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்து வெளியான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற 1,369 வீதி விபத்துகளில் 316 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வீதி விபத்துகளைத் தடுக்க ஒவ்வொரு வீதி உபயோகத்தரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (17.11.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், கிளிநொச்சி நகர ரோட்டரி கழகத்தின் வீதிப் பாதுகாப்புக் கல்வியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியான உயிரிழப்புகள்
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வீதி விபத்துகள் இன்று அன்றாடச் செய்திகளாக மாறிவிட்டதாகவும், ஒரு காலத்தில் எப்போதாவது இடம்பெற்ற துயரச் சம்பவங்களாகக் கருதப்பட்ட விபத்துகள் தற்போது தொடர்ச்சியாக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கவலை வெளியிட்டார்.

வீதி விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை மற்றும் உயிரின் பெறுமதி குறித்த அக்கறையின்மை ஆகியன முக்கிய காரணங்களாக அமைவதாகக் குறிப்பிட்டார்.
வாகனத்தை வேகமாகச் செலுத்தும் ஒவ்வொரு சாரதியும் தம்மை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதேபோன்று எதிரே வரும் வாகனத்திலும், வீதியில் பயணிக்கும் ஒவ்வொரு பாதசாரிக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கின்றது. எனவே, வேகமாகச் சென்றடைவதைவிடப் பாதுகாப்பாகச் சென்றடைவதே முக்கியமானது எனவும் வலியுறுத்தினார்.