பூநகரி கௌதாரிமுனையில் அமைந்துள்ள மணல் திட்டினால் போக்குவரத்து பாதிப்பு
பூநகரி கௌதாரிமுனையில் அமைந்துள்ள மணல் திட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர் செய்வதற்கான அனுமதியை கனியவள திணைக்களம் இழுத்தடிப்பதனால் கிராமத்திற்குள்ளேயே மணலை விற்பனை செய்து பிரதேச சபைக்கு நிதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பூநகரி பிரதேச சபை தவிசாளர் ஐயம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்ட குழுவினர் குறித்த நடவடிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு எட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கான ஒரேயொரு போக்குவரத்து பாதையாக காணப்படும் குறித்த வீதியில் மண் திட்டு காணப்படுகின்றது.
குறித்த மண் திட்டு வருடம் தோறும் சரிந்து போக்குவரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலைமையில் 2 வருடமாக குறித்த மண்திட்டு சரிந்து விழுந்துள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கு திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பூநகரி பிரதேச சபையிடம் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் இழுத்தடிப்பு செய்ததாகவும் பிரதேச மக்களால் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில்,பிரதேச மக்களின் தனிநபர் வருமானத்திலிருந்து நிதி சேகரிக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய வகையில் மணல் கடல் பகுதிக்குள் தள்ளி விடப்பட்டதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள காற்றினால் மீண்டும் மண் திட்டு அதிகரித்து சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் பிரதேச சபையிடம் மீண்டும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்பாடுகள் செய்து தரவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த பூநகரி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், மற்றும் வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் பகுதியை ஆராய்ந்தனர்.தொடர்ந்து குறித்த மண் திட்டினை அகற்றுவதற்கு தாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
குறித்த மண் திட்டினை அகற்றி பிரதேசத்தின் போக்குவரத்தினை சீர் செய்வதற்கும், அதன் ஊடாக பிரதேச சபைக்கான வருவாய் ஒன்றினை திரட்டுவதற்கும் பல்வேறு முயற்சிகளை தாம் மேற்கொண்டதாகவும், அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ள போதிலும், கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு செய்து வருவதாலேயே இவ்வாறான நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் பிரதேசத்தின் தற்போதைய நிலை மற்றும் பிரதேச சபையின் வருவாயினை கருத்தில் கொண்டு இந்த வாரமளவில் உள்ளுரிற்குள் மணலினை விற்பனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த மணலினை விற்பனை செய்து பிரதேச சபை ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், அவ்வருமானத்தை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த மணலை விற்பனை செய்து பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்து கௌதாரிமுனை கிராமத்தினையே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதேச மக்கள் இன்றைய தினம் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.