100 ஆண்டுகளாக நரியை பயன்படுத்தி நடத்தப்படும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு்:அனுமதி கோரும் மக்கள் (Photos)
தமிழகத்தின் சேலம் வாழப்பாடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நரி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வங்காநரி என்ற நரி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சின்னமநாயக்கன் பாளையம், கொட்டவாடி, ரங்கனூர், மத்தூர், பெரிய கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில், மார்கழி மாதம் பயிர்களை அறுவடை செய்த பின்னர், கதை மாதத்தில் புதிய பயிர் செய்கையில் ஈடுபடுகின்றனர்.
புதிய பயிர் செய்கைக்கு முன்னர் நரி முகத்தில் விழித்தால் நல்ல பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக மக்கள் வருடந்தோறும் பொங்கலன்று வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டை நடத்தி, பொங்கல் பண்டிகையை நிறைவு செய்கின்றனர்.
எனினும் வங்காநரி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருப்பதாக தமிழக வனத்துறையினர் நரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்துள்ளனர். மீறு நடத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால், 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக முன்னோர்கள் நடத்திய வந்த பாரம்பரிய விழாவான வங்காநரி ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை வங்காநரி என்ற இந்த விலங்கு பாதுகாக்கப்பட்ட வனத்தில் வாழும் விலங்கு அல்ல என மக்கள் கூறியுள்ளனர்.
இந்த விலங்கு, தரிசுநிலங்கள், சிறு கரடுகள், நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் புதர்களில் வாழ்ந்து வருகிறது. இந்த நரிகளை பிடித்து விழாவை நடத்தி, மக்களின் முகத்திற்கு நேரில் காட்டிய பின்னர், அதன் வாழ்விடங்களிலேயே விட்டு விடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால், சட்டத்தில் திருத்தம் செய்து, பாரம்பரியமாக நடத்தி வரும் வங்காநரி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்வதை கைவிட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் காளை மாடுகளை பயன்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது பாரம்பரியமாக இருந்து வரும் நிலையில், நரிகளை பயன்படுத்தி 100 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தும் பழக்கம் தொடர்பான இந்த செய்தி வெளியாகியுள்ளது.




பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam