இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதாக தகவல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் கீழ் நோக்கி செல்வதன் காரணமாக, இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் இறக்குமதியாளர்களிடம் இருந்து நிதியுதவி கிடைக்காது என்ற அச்சத்தில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தியா, இலங்கையின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும், மேலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நாடுகளில் ஒன்றாகும்.
பெருகிவரும் இயல்புநிலை அபாயங்கள் காரணமாக இலங்கையின் கொள்வனவாளர்களிடம் இருந்து புதிய கட்டளைகளை பெறுவதில் தாம் தயங்குவதாக மும்பையைச் சேர்ந்த ஒரு சிறந்த சீனி ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய ஏற்றுமதி
இலங்கை ஒவ்வொரு மாதமும் உட்கொள்ளும் 40-50,000 தொன் சீனியில் 90% இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
பொறியியல் பொருட்கள், இரசாயனங்கள், இரும்பு, விவசாயப் பொருட்கள், எரிபொருள், மருந்துப் பொருட்கள், பால் மா, வெங்காயம் மற்றும் திராட்சை ஆகியவை இலங்கைக்கான இந்திய ஏற்றுமதிகளில் உள்ளடங்குகின்றன.
2021-22 நிதியாண்டில், இந்தியா குறைந்தது 5.8 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் முற்றிலுமாக நின்றுவிட்டன. இந்த நிலையில், அரசியல் நெருக்கடி மற்றும் பணம் செலுத்தும் பிரச்சினைகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் காலித் கான் இந்தியாவின் எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மொத்த போக்குவரத்து சரக்குகளில் 60% மற்றும் கொள்கலன்
போக்குவரத்தில் 30% கொழும்பு துறைமுகத்தால் கையாளப்படுகிறது.
எனினும் இலங்கையின் நெருக்கடியானது துறைமுக செயற்பாடுகளை பாதிக்கின்றது
என்றும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.