சுற்றுலாப்பயண வழிகாட்டி போதைப்பொருளுடன் கைது
தென்னிலங்கையில் சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் போதைப்பொருட்கள் வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, தங்காலை அருகே மெதகெட்டிய பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பொதியொன்றுடன் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து சுமார் இரண்டு கிலோ அளவிலான ஹசீஸ் மற்றும் 750 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் தீவிர விசாரணை
மேலும் பயணப்பொதியில் போதைப் பொருட்களை எடைபோடுவதற்கான டிஜிட்டல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் சுற்றுலாப் பயண வழிகாட்டியாக தொழில் புரிவது தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் அவரது விநியோக வலையமைப்பு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.