சுற்றுலாப் பயணிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை
எரிபொருள் விநியோகிக்கப்படுவது அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணாக தம்புள்ளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எதிரில் இன்று கடும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் வழங்க மறுப்பு
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய பல வாகனங்கள் எரிபொருளை நிரப்ப சென்றிருந்தன.
எனினும் எரிபொருளை வழங்க முடியாது என எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
முன்தினம் வரிசைகளில் இருந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்ததுடன் டோக்கன் பெற்றிருந்தவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தினர் மறுத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளுடன் சென்றவர்கள் தமது வாகனங்களை தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்க எப்படியாவது எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவிடம் கோரியுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், தம்புள்ளை தலைமையக பொலிஸ் பரிசோதகருடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று தலா 10 லீட்டர் எரிபொருளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் வழங்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை எனவும் முறைமை ஒன்று உருவாக்கப்படாத காரணத்தினால், ஒரு புறம் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் மறுபுறம் சுற்றுலாப் பயணிகள் மூலம் நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போவதை தான் விரும்பவில்லை எனவும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளை வழங்கிய பொலிஸார்
அரசாங்கமோ பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளோ உரிய முறைமை நடைமுறைப்படுத்தாத காரணத்தினால், தான் பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கு போல் இரண்டு பக்கங்களிலும் நெறுக்குவாரங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர், சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க உதவுமாறு வரிசையில் இருந்த மக்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அந்த இடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க எந்த விதத்திலும் அனுமதிக்க போவதில்லை வரிசையில் இருந்த மக்கள் கூறியுள்ளனர்.
அங்கு பதற்றம் ஏற்பட்ட போதிலும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பொலிஸார் உறுதியாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருளை சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களுக்கு வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர், எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.