போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு ஆரம்பமானது
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கன்சர்வேடிவ் கட்சியின் டோரி எம்.பிகள் இரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற 180 பேரின் ஆதரவு தேவை
கோவிட் கட்டுப்பாடுகளை மீறியமை, பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் போரிஸ் ஜோன்சனின் தலைமைத்துவ பாணியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை முன்வைத்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய நேரப்படி மாலை 6 மணி முதல் 8 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் இரவு ஒன்பது மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சனை ஆதரிப்பதாக கன்சர்வேடிவ் கட்சியின் 131 எம்.பி.க்கள் பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெற்றிபெற 180 எம்.பிகளின் ஆதரவு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.
போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வாக்களிப்பேன்
இதேவேளை, நம்பிக்கைத் தீர்மானத்தில் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்காட்லாந்து டோரி தலைவர் டக்ளஸ் ரோஸ் தெரிவித்துள்ளார். பிரதமரின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை ரோஸ் மாற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
போரிஸ் ஜோன்சன் வழங்கிய உறுதி
இந்நிலையில், நான் மீண்டும் உங்களுக்காக வெற்றி பெறுவேன் என கன்சர்வேடிவ் கட்சியின் டோரி எம்பிக்களுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.
வாக்கெடுப்பிற்கு முன்னதாக தனது சொந்த கட்சியின் டோரி எம்.பிக்களிடம் உரையாற்றிய போரிஸ் ஜோன்சன், நான் மீண்டும் உங்களை வெற்றிக்கு அழைத்து செல்வேன் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்காலம் குறித்து அர்த்தமற்ற சகோதரச் சண்டையில் இறங்குவதற்கு எதிராக போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.