யாழ். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையின் 200ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் (Video)
யாழ். வடமராட்சி - பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (27.06.2023) கோலாகலமான நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பிரதம மற்றும் சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை நுழைவாயிலிலிருந்து பாடசாலை மைதானம் வரை பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதல் நிகழ்வாக தேசிய கொடி, பாடசாலை கொடி என்பன முறையே யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசா, பாடசாலை அதிபர் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டு, சைவ கிறிஸ்தவ இறை வணக்கங்கள் இடம்பெற்றன.
நடைபவனி
வரவேற்பு மற்றும் தலைமை உரையினை கல்லூரி முதல்வர் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்புரையை நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் சிறி சற்குணராசா நிகழ்தியதை தொடர்ந்து நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக துணை வேந்தர் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாணவிகள், பழைய மாணவிகள் அதிபர் ஆசிரியர்களின் துவிச்சக்கர வண்டி பவனி வாகன பவனி, நடை பவனி என்பன இடம் பெற்றன.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் கலைச்செல்வன், வடமராட்சி வலய கல்வி பணிமனை அதிகாரிகள், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் நலன் விரும்பிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நடைபவனி கல்லூரி வீதி ஊடாக சென்று பருத்தித்துறை நகர், மந்திகை நகர், நெல்லியடி நகர், ஊடாக மீண்டும் பாடசாலை வளாகத்தில் சென்று முடிவடைந்துள்ளதுடன் நாளை, நாளை மறுதினமும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |