ஒலிம்பிக் போட்டி பயணத்திற்காக அனுசரணையை பயன்படுத்தவில்லை! ராஜாங்க அமைச்சர் மறுப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை பார்வையிடுவதற்காக மேற்கொண்ட விஜயத்திற்காக அனுசரணையாளர்களின் உதவியை பயன்படுத்தவில்லை என ராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினரின் அனுசரணை பெற்றுக்கொண்டதாக கூறப்படுவதனை ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக அதிகாரபூர்வமாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பயணம் செய்திருந்தார்.
இதேவேளை, ராஜாங்க அமைச்சர்களான தெனுக விதானகே, ரொசான் ரணசிங்க மற்றும் டி.வீ. சானக்க ஆகியோரும் டோக்கியோவிற்கு பயணம் செய்திருந்தனர்.
இந்த பயணத்திற்கு அரசாங்கம் செலவிட்டுள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியார் அனுசரணை கிடைக்கப்பெற்றது என ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார்.
எனினும், சொந்த பணத்தைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தில் தாம் இணைந்து கொண்டதாக ராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் ஊடக செயலாளர் பிரசன்ன அதிகாரி இந்த விடயத்தை ஊடக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
