தொடரும் சீரற்ற காலநிலை: களத்தில் இராணுவம்
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக நில்வலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாத்தறையில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
மேலும், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் மிகுந்த அவதானம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்,மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகமான பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.