வடக்கு, கிழக்கில் தீவிரமடையும் மழை : வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடையிடையே சிறிய மழை கிடைக்கும்.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும். எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 23ஆம் திகதி அதிகாலை மற்றும் காலை வேளைகளில் குளிரான வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்து
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் (3) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |