மகாராணியின் இலங்கை வருகை: வரலாற்றில் இடம்பிடித்த பக்கங்கள்!
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட கால ஆட்சியானது அவரது வலுவான கடமை உணர்வு மற்றும் தனது வாழ்க்கையை தன் மக்களுக்காக அர்ப்பணிப்பதில் உறுதியுடன் இருந்தது.
1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.
மகாராணியின் இலங்கை விஜயம்
பிரித்தானியாவின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி தனது 70 ஆண்டுகால ஆட்சியில் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
முதலில் 1954 இல் மற்றும் பின்னர் 1981 ஆம் ஆண்டு ஆகும்.
மகா ராணியின் இரண்டாவது இலங்கை விஜயத்தின் போது அவருடன் அவரது கணவர் இளவரசர் பிலிப், எடின்பர்க் டியூக்கும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
பத்து நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்த ராணி பல சுற்றுப்பயணங்களிலும் ஈடுபட்டார்.
மகா ராணியின் இலங்கை விஜயத்தின் போது அவருக்கென கொழும்பில் ஒரு அரச அணிவகுப்பு நடைபெற்றது.
இவ் விஜயத்தின் போது இலங்கையின் இரண்டாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வை மகாராணி இரண்டாம் எலிசெபத் தொடங்கி வைத்தார்.
விக்டோரியா பூங்கா
அத்துடன் ராணியின் இலங்கை விஜயத்தின் போது அவர் கண்டிக்கு ஒரு தொடருந்து பயணம் மேற்கொண்டதுடன், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கும் அவர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தை முன்னிட்டு இளவரசர் மற்றும் மகா ராணி இரண்டாம் எலிசெபத் ஆகியோர் நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மரக்கன்று ஒன்றை நட்டனர்.
ராணி எலிசபெத் நட்டு வைத்த மரம் இப்போது இல்லை என்றாலும், 67 ஆண்டுகால நட்பு மற்றும் ஒத்துழைப்பின் செய்தியை பரப்பும் வகையில், இளவரசரினால் நடப்பட்ட மரம் பூங்காவில் பூத்து குலுங்குவதைக் காணலாம்.
ராணியின் இவ் விஜயத்தின் போது இங்கிலாந்து நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான விக்டோரியா அணையின் கட்டுமானத்தையும் காண அங்கும் மகா ராணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிரு்தார்.
வரலாற்றில் சாதனையின் ராணியாக திகழ்ந்த மகாராணி இரண்டாம் எலிசெபத் உயிரிழந்தமை உலக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது,
ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி
மகா ராணியின் இறுதி கிரியை இன்று நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நேற்று தமது இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதன் ஊடாக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார்.
உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்கிரமசிங்க ஆகியோர் பெப்ரவரி 1952 இல் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் கலந்துகொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகா ராணி இரண்டாம் எலிசெபத்தின் இறுதி கிரியை நடைபெறும் இன்றைய நாள் இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.
அவரின் புகழை, சாதனைகளையும் என்றும் காலம் சுமந்து செல்லும் என்பது நிலையான உண்மை.