இரட்டிப்பானது ராஜகுடும்பத்தின் சொத்து மதிப்பு - பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்ந்த இளவரசர் வில்லியம்
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக திகழ்கிறார் இளவரசர் வில்லியம். வேல்ஸ் இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இளவரசர் வில்லியத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 1.05 பில்லியன் பவுண்டுகள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்துமதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் விட எட்டாத தொலைவில் இருக்கிறார் இளவரசர் ஹரி.
ஹரி மற்றும் மேகன் தம்பதியின் மொத்த சொத்துமதிப்பு 20 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே என தெரியவந்துள்ளது.
இரு மடங்காக அதிகரித்த சொத்து மதிப்பு
மன்னர் சாலரின் சகோதரியும் மறைந்த ராணியாரின் மகளுமான இளவரசி ஆன் சொத்துமதிப்பு 50 மில்லியன் பவுண்டுகள் எனவும், இளவரசர் எட்வார்ட் மற்றும் சோஃபி தம்பதிக்கு 10 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருப்பதாகவும், அதேவேளை இளவரசர் ஆண்ட்ரூ சொத்துமதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
2012 மார்ச் மாதம் வெளியான தகவலில் ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு 9 பில்லியன் பவுண்டுகள் எனவும், ஆனால் 2022 மார்ச் மாதம் வெளியான தகவலில் அது 18.3 பில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
இது இவ்வாறு இருக்க பல்பொருள் அங்காடி குழுமமான டெஸ்கோவின் மொத்த பங்குச்சந்தை மதிப்பு 17 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே. ராணியார் மறைவுக்கு பின்னர் சார்லஸ் வசம் இருந்த 685 ஆண்டுகள் பழமையான கார்ன்வால் எஸ்டேட் இளவரசர் வில்லியம் கைவசம் வந்துள்ளது.
மன்னர் வசமாகும் லான்காஸ்டர் எஸ்டேட்
இதனாலையே தற்போது வேல்ஸ் இளவரசர் என பட்டம் பெற்றுள்ள வில்லியம் பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மேலும், இளவரசி டயானா மறைவுக்கு பின்னர் அவரது சொத்தில் 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் வில்லியம் வசமானது.
அத்துடன், 2002ல் ராணியாரின் தாயார் இறந்த பின்னர் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் இளவரசர் வில்லியன் பெயரில் மாற்றப்பட்டது. இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூட்டும் நிலையில் 671 ஆண்டுகள் பழமையான லான்காஸ்டர் எஸ்டேட் அவர் வசமாகிறது.
இதன் மதிப்பு 652.8 மில்லியன் பவுண்டுகள் எனவும் வருவாய் 24 மில்லியன் எனவும் கூறப்படுகிறது. மேலும், மன்னர் சார்லஸின் எஞ்சிய சொத்துக்கள் தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.