மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க கடும் முயற்சி! ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிக்க தயாராகி வருவதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல வெளிநாட்டுத் தூதுவர்கள் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்பதற்காக செயற்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அதற்கு தங்களது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்சவுக்கு எதிரான குழுவும் எதிர்க்கட்சியின் ஒரு குழுவும் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி, ஜனாதிபதி பதவி வெற்றிடமான மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
இதனால், சட்டத்தின் 5ஆவது பிரிவின்படி ஜனாதிபதியின் பதவிக்கு வெற்றிடம் இருப்பதாக பொதுச் செயலாளர் நாளை (16) அறிவிக்க உள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தப்படவும் உள்ளது.
வாக்கெடுப்பின் பின்னர் ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.