புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி

Sri Lankan Tamils TNA Northern Province of Sri Lanka Sri Lankan local elections 2023
By Dharu Jun 30, 2023 10:41 PM GMT
Report
Courtesy: கூர்மை

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு "தேசிய இயக்கம்" போன்ற அமைப்பையே எதிர்பார்த்திருக்கிறது.

ஆனால் கடந்த பதினான்கு வருடம் சென்ற பின்னரும்கூட அது சாத்தியமாகவில்லை. தேர்தல் வியூகங்களுடன் கட்சி அரசியல் மாத்திரமே வளர்ந்து வருகின்றன.

வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்த்தேசிய அரசியல் இயங்கு நிலைக்குத் 'தேசிய இயக்கம்' அவசியம் என்றும் அந்தத் தேசிய இயக்கமே இலங்கை அரசாங்கத்துடனும் கொழும்புக்கு வந்து செல்கின்ற சர்வதேச அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் மக்கள் விரும்பியிருந்தனர்.

இந்த அரசியல் பத்தியில் பல தடவைகள் இது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது. வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சிலரும் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு எழுதியுமிருக்கின்றனர்.

ஆனால் இதுவரையும் அவ்வாறான தேசிய இயக்கம் அல்லது பலமுள்ள சிவில் அமைப்புகள் கூட வடக்குக் கிழக்கில் உருவானதாக இல்லை.

சம்பந்தன் சுமந்திரன் முடிவுகள்

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

2009 இற்குப் பின்னர் செயற்பட்டு வந்த சில சிவில் சமூக அமைப்புகளும் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பின்னால் அல்லது அந்தக் கட்சிக்குத் தேவையானதையே செயற்படுத்தி வந்தன. 2010 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு "தேசிய இக்கம்" என்ற அளவில் செயற்படும் என்ற நம்பிக்கை 2015 வரை தென்பட்டிருந்தது.

அரசியல் விடுதலையைப் பெறக்கூடிய முறையில் அதாவது அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவுக்கு முன்னணி அப்போது பிரதான அமுக்கக் குழுவாகச் செயற்பட்டிருந்தது. இப் பின்புலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற ஆசனங்களும் மக்கள் செல்வாக்கும் குறைய ஆரம்பித்தது.

2010 இல் பதினெட்டு ஆசனங்களும் 2015 இல் 16 ஆசனங்களும் 2020 இல் பத்து ஆசனங்களும் பெறப்பட்டு மக்கள் செல்வாக்கும் பலமும் குறைவடைந்தது. இதற்கு முன்னணியின் அப்போதைய அரசியல் ஈடுபாடுகள் பிரதான காரணமாக இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இச் சூழலில் 2020 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள் குறைவடைந்து உள்ளக முரண்பாடுகள் மேலும் விரிவடைந்தன. குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்குரிய முக்கியத்துவம் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரை மையமாகக் கொண்ட முடிவுகள் - செயற்பாடுகள் போன்ற காரணங்களினால், கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் விசனமடைந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை.

சிவசக்தி ஆனந்தன்

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

2015 இல் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியினால் ஓரம்கட்டப்பட்டார். ஏனெனில் தமிழரசுக் கட்சித் தலைமையின் செயற்பாடுகள் குறிப்பாகச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளை அவர் துணிந்து வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சிவசக்தி ஆனந்தனுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதாவது பேச்சுரிமை அப்போது மறுக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தங்களுக்குரிய நேரத்தைப் பங்கிட்டு சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கியிருந்தன.

அப்போது கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேயில்லை. ரெலோத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அப்போது நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகப் பதவி வகித்திருந்தார்.

சிவசக்தி ஆனந்தன் தனக்குரிய பேச்சுரிமை மறுக்கப்பட்டமை குறித்து, செல்வம் அடைக்கலநாதனிடம் தனிப்பட்ட ரீதியில் முறையிட்டிருந்தபோதும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துக் கட்சியின் தலைவராக அன்றி நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் என்ற முறையில் கூட அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்று அதில் ரெலோ மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது இதன் பின்னரான சூழலில் தமிழரசுக் கட்சியுடன் ரெலோவுக்கு முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் செல்வம் அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்குரிய நேரத்தைச் சம்பந்தன் ஒதுக்கவுமில்லை. அதாவது அப்போது சிவசக்தி ஆனந்தனுக்கு ஏற்பட்ட நிலை இப்போது செல்வம் அடைக்கலநாதனுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் புளொட்டும் கூட்டமைப்புடன் முரண்பட்டது. இப் பின்புலத்திலேதான் ஈபிஆா்எல்எவ்வுடன் கூட்டுச் சேர்ந்து "ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு" என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

யார் தலைவர்

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்புடன்தான் இந்த முரண்பாடு அதிகரித்துத் தனித்துச் செயற்பட வேண்டுமென்ற சிந்தனை ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கு உருவானது.

2017 இல் சிவசக்தி ஆனந்தனுக்குப் பேச்சுரிமை மறுக்கப்பட்டபோது ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஈபிஆர்எல்எப் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கண்டித்து வெளியேறியிந்தால், அப்போதே புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கலாம்.

ரணில் பிரதமராக இருந்தபோது தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இணக்க அரசியலுக்குள் ரொலோவும் புளொட்டும் குறிப்பாக ரெலோ இணக்க அரசியலை நம்பியதால், சிவசகத்தி ஆனந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்திப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றியிருக்கவில்லை.

அன்று அவ்வாறு செயற்பட்டிருந்தால், 2020 பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் கண்டிருக்கலாம். இருந்தாலும் தற்போது அந்த முயற்சி கைகூடியுள்ளது. யாப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் தலைவர் என்பதில் தான் தற்போது மனக் கசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் ஆபத்தும் நேர்ந்துள்ளது. இதனால் தலைவர் இல்லாமல் இணைத் தலைவர்கள் என்று நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காக ஆறு மாதங்கள் வரை உரையாடி உருவாக்கப்பட்டுள்ள யாப்பின் பிரகாரம் பதினைந்துபேரைக் கொண்ட நிறைவேற்றுக் குழுவிடமே முழு அதிகாரங்களும் உண்டு.

நிறைவேற்றுக் குழு விரும்பினால் தலைவர் ஒருவரைச் சுழற்சி முறையில் நியமிக்கும் ஏற்பாடுகளும் யாப்பில் உண்டு. தலைவராக வரக்கூடியவர் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானங்கள் இன்றித் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு நிறைவேற்றுக் குழு பலமுள்ளதாகக் காணப்படுகின்றது.

ஒருவர் மீது ஒருவர் சந்தேகம்

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

ஆகவே பலமுள்ள இப் பின்னணியில் கூட்டமைப்புக்குத் தலைவர் ஒருவரை நியமிப்பதே விடுதலை அரசியலுக்குச் சிறப்பானது. இணைத் தலைவர்கள் என்பது கட்சித் தலைவர்களிடையேயான சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் வலுப்படுத்துகிறதே தவிர கூட்டுப் பொறுப்பை அல்ல.

தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உருவாக்கப்பட்ட புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் யார் என்று கேட்டால், இணைத் தலைவர்கள்தான் இருக்கிறார்கள் என்று கூறலாமா? ஆகவே ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட், தமிழ்த்தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது பட்டவர்த்தனமாகிறது அல்லவா?

இச் சந்தேகமே கூட்டமைப்புக்கான நம்பிக்கையுடைய தலைவர் ஒருவரை நியமிக்கத் தயங்குவதற்குக் காரணம் என்பதும் பகிரங்கமாகிறதல்லவா? ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற உண்மையான உணர்வு இவர்களிடம் இருக்குமானால், எந்த நோக்கத்துக்காகத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்களோ அந்த நோக்கத்துக்கு மாறாக மீண்டும் தமிழரசுக் கட்சி போன்று இந்த ஐந்து கட்சிகளும் தனித் தனிச் செல்வாக்கை வளர்க்க முற்படுகின்றனர் என்பது புரிகிறது.

குறிப்பாக ஈபிஆா்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் நகர்வுகளும் அதனை வெளிப்படுத்துகின்றன. அதாவது தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுத்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிப் பின்னர் தத்தமது கட்சிகளை வளர்த்துக் கட்சிச் செயற்பாடுகளோடும் சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் இந்தியா சொல்வதைக் கேட்கின்ற கட்சிகளாகச் செயற்படவுமே இவர்கள் விரும்புகின்றனர் என்பதும் இங்கே வெளிப்படையாகிறது.

கூட்டமைப்புக்காகத் தேசிய அமைப்பாளர், பேச்சாளர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் வடக்குக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு உப தேசிய அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி யாப்பின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றால், நிறைவேற்றுக்குழுவுக்குரிய அதிகாரத்தின் படி தலைவர் ஒருவரையும் நியமிப்பதுதானே சிறப்பு? ஐந்து கட்சிகளில் இருந்தும் மூன்று உறுப்பினர்கள் வீதம் பதினைந்து பேர் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும்போது, தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் சந்தேகம் ஏன்? தாழ்வு மனப்பான்மை ஏன்? யாப்பின் பிரகாரம் நிறைவேற்றுக்குழுவின் கூட்டுப் பொறுப்பு உண்மையானதாக இருக்குமானால் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பில்லை.

2009 இற்குப் பின்னரான சூழல்

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

1949 இல் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும், 1977 இல் உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியும், 2001 இல் உருவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் தலைமை இருந்தது. ஆனாலும் தலைமையும் மற்றும் சிலரும் எடுக்கின்ற முடிவுகள் கட்சி அரசியல் செயற்பாட்டுக்கு மாறானதாக அதுவும் விடுதலை அரசியல் செயல் முறைமைகளுக்கு மாறானதாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

"கூட்டுப் பொறுப்பு" "அரசியல் விடுதலை" என்ற சிந்தனைகளை மாற்றித் தமது விருப்பங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கத்துடனும், இந்தியாவுடனும் தொடர்பு கொண்டு பேசுவது, பின்னர் அந்த முடிவுகளைக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்களிடமும் திணிக்க முற்படுவது போன்ற அணுகுமுறைகள் மேலோங்கியிருந்தமை உண்மைதான்.

இது "விடுதலை அரசியல்" இயங்கு தளத்துக்குப் பொருத்தமான செயற்பாடுமல்ல. அதுவும் 2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களுக்கான தலைமைக் கட்சி என்று கூறப்பட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செற்பாடுகள் அதிருப்திகளையும், இந்தக் கூட்டமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற அளவுக்கு மக்களிடமும் வெறுப்பு உணர்வுகளும் காணப்பட்டிருந்தன.

குறிப்பாகச் சம்பந்தன் கூட்டுப் பொறுப்பைப் பேணத் தவறிவிட்டார் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. அதன் காரணமாகவே 2010, 2015, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற ஆசனங்களும் படிப்படியாகக் குறைவடைந்தும் வந்தன.

ஆகவே இப் பின்னணியில் உருவாக்கப்பட்ட மேற்படி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தலைமை இல்லாத அல்லது தலைவராக வரக்கூடியவர் மீது சந்தேகம் கொள்கின்ற தன்மை இருக்குமானால், சுய விருப்பங்கள், தனிப்பட்ட கட்சி அரசியல் நலன்கள் தாராளமாகக் குடிகொண்டுள்ளன என்பதையே புடம்போட்டுக் காட்டுகிறன.

இங்கு கூட்டுப் பொறுப்பு இல்லை என்பதும் பட்டவர்த்தனமாகிறது. தலைமை என்பது வழிகாட்டுதல். எவரையும் அடக்கி ஆள்வதல்ல. தன்னிச்சையாக முடிவெடுத்தல் என்பதுமல்ல. அதுவும் விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றின் கூட்டமைப்புக்குரிய அல்லது தேசிய இயக்கம் ஒன்றுக்குரிய தலைமை என்பது அதன் நிர்வாகக் கட்டமைப்புக்குக் கட்டுப்பட்டதாகவும் மக்களின் கருத்துக்களை அறிந்து நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

கூட்டுப் பொறுப்பைப் பேணும் ஆற்றலும் இருக்க வேண்டும். மாறாகக் குறிப்பிட்ட சில நபா்களுடன் இணைந்து மேலிருந்து முடிவுகளை எடுக்காமல், மக்களிடம் இருந்து அதாவது கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் கருத்தை அறிந்து முடிவுகளை எடுக்கக் கூடியவரே வழிகாட்டல் தலைமைக்குத் தகுதியானவர்.

இது ஆயுதப் போராட்டக் காலமல்ல. ஆகவே உலக அரசியல் ஒழுங்கு தற்போது மாற்றமடைந்து வரும் சூழலில் ஜனநாயக வழியில் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழிகாட்டக் கூடிய ஒருவரையே தலைவர் என்று அறிமுகப்படுத்த வேண்டும்.

அத்தகைய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் ஐந்து கட்சிகளிடமும் சந்தேகம் நிலவுமானால், அல்லது நிறைவேற்றுக் குழுவுக்குரிய கூட்டுப் பொறுப்பில் நம்பிக்கை இல்லையானால் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று சொல்வதில் அர்த்தமேயில்லை.

சம்பந்தன் தலைமையிலான அல்லது சுமந்திரனின் தனி ஆதிக்கத்தை மையப்படுத்திய தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடான புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று சொல்வதானால், அதற்குரிய கூட்டுப் பொறுப்புப் பண்புகள் - தகுதிகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் பணிகள் ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தனி ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, ஒரு கட்சியின் தலைமை எப்படி இயங்க வேண்டும், கூட்டுப் பொறுப்பு என்றால் என்ன என்பது பற்றிய முன்னுதாரணத்தைப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த இது அரிய சந்தர்ப்பமல்லவா? ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க முடியுமல்லவா? அத்துடன் அமெரிக்க - இந்திய அரசுகளுடன் பேரம் பேசும் அளவுக்குரிய வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவான சிந்தனைகளைப் புதிய கூட்டமைப்பு ஒருமித்த கருத்தாக அறிவிக்க வேண்டும்.வெளியுறவுச் செயற்பாட்டின் வகிபாகத்தை பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.

நிரந்தரமான அரசியல் தீர்வு

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி | Tna Tamil Mp Political Crisis

வெறுமனே அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதைக் கேட்பது, பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஆரம்பப் புள்ளி என்று மார்தட்டிக் கூனிக் குறுகி நின்று அரைகுறை அரசியல் தீர்வைக் கோருவதற்குப் புதிய கூட்டமைப்பு தேவையில்லை.

"முழுமையான நிரந்தரமான அரசியல் தீர்வு" என்ற தயார்படுத்தலோடும் அதற்குரிய கூட்டுப் பொறுப்புடனும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கப்பட வேண்டும். மாறாகத் தெளிவான வெளியுறவுக் கொள்கையற்ற அசியல் பார்வையும், புவிசார் அரசியல் - பொருளாதாரப் போட்டிகளுக்கு மத்தியில் நிரந்தர அரசியல் தீர்வுக்குரிய ஒழுங்குகள், இன அழிப்புவிசாரணைக்குரிய வேலைத் திட்டங்கள் எதுவுமேயின்றியும் கட்சி அரசியல் நலன்களுடன் மாத்திரம் இப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெறுமானால், அது சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாறும்.

இதுதான் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலை என்றால், தமிழரசுக் கட்சியும் அதன் அரசியலும் போதுமானது.

தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாகவும் குறைந்த பட்சம் ஈழத்தமிழர் அரசியல் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் போதுமானது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடும் நிலை உருவாகும்.

என்னமோ, தமிழ்த்தேசிய விடுதலை அரசியலுக்கு இது வேதனையுடன் கலந்த சோதனைக்காலம்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US