இந்தியாவிற்காக தயாராகும் புதிய ஆவணம்! கூட்டிணைந்த இலங்கை தமிழ் கட்சிகள்
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பவுள்ள ஆவணம், இந்த மாத இறுதிக்குள் அல்லது 2022 ஜனவரி முதல் வாரத்துக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தை அடையும் வகையில், தமிழ் பேசும் கட்சிகளின் அமர்வை ஏற்பாடு செய்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் முஸ்லிம் கட்சிகள், 13வது திருத்தம் தொடர்பாக தயாரித்திருந்த நகலும், தமிழரசுக்கட்சி, கடந்த வாரம் சமர்ப்பித்த நகலும் இணைக்கப்பட்டு புதிய நகல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நகல் தற்போது தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த புதிய நகலில் திருத்தங்கள் ஏதாவது இருப்பின் அதனை சுட்டிக்காட்டி, கட்சிகளின் தலைவர்கள், மீண்டும் அதனை கையளிக்கவுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் தமிழ்பேசும் கட்சிகளின் அமர்வு கூட்டப்பட்டு, ஆவணத்தை இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.