குருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குறித்த குழுவினரை அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததோடு, யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது என அளம்பில் இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து தடை விதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு விடயம் குறித்து தெரியப்படுத்தியதை தொடர்ந்து தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொலைபேசியூடாக சார்ள்ஸ் நிர்மலநாதனுடன் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்ற போதும் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகைதந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இலக்கங்களையும், இராணுவத்தினர் குறிப்பெடுத்துள்ளதுடன், வருகை தந்தவர்களின் விபரங்களையும் பதிந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

