ரணிலுக்கு எதிரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் தவறு: மாவை சேனாதிராஜா
எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்ட டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸவுடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், என்னாள் அந்த நிகழ்வுக்கு போக முடியவில்லை.
இதனை தொடர்ந்து, இந்த விடயம் இரவோடு இரவாக ஊடகங்களுக்கு செய்திகளாக சென்றிருக்கின்றன. இது பாரதூரமான நிலைமை.
மேலும், உடன்பாடு ஏற்பட்டிருந்தால் அதனை வெற்றி பெற்றதற்கு பின்னர் வெளியிட்டிருக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அது தெரிந்தால் மாத்திரம் போதுமானது. அதற்கிடையில் அதனை வெளியே கூறியதை ஏற்கமுடியாது. இந்த காரணத்தினாலும் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கலாம்.
ஊடகங்களுக்கு வெளியாகிய செய்தி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்தியா நிர்பந்தித்துதான் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு இருக்கின்றதென தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அதனுடைய உண்மை எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் இவ்வாறு இந்தியாவினுடைய பெயரை உச்சரித்து அந்த தீர்மானத்தை எடுத்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இது ராஜதந்திரமற்ற விடயம் என்பதுடன் ஒரு பிரச்சினையை உருவாக்கி இருக்கின்றது.
இவ்வாறான செய்தி வெளியான நிலையில் மறுநாள் காலையில் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என சுமந்திரனுடைய பெயரில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
இந்தியா எனும் போர்வை
இதன் காரணமாக டலஸ் எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியாமல் ரணில் எதிர்பார்த்த வாக்குகள் பெறுகின்ற நிலைமையை உருவாகி இருக்கின்றது.
எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு கட்சியாக இருக்கும் போது இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
எமது கருத்தில் நம்பிக்கையில்லை என்று இந்தியாவை இழுத்து பேச வேண்டிய சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.
எங்களுக்கு பலமாக இருக்கின்ற இந்தியாவினுடைய பெயரை இவ்வாறு பயன்படுத்துவது மிகவும் தவறான செய்தியாகும். இதனால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்" என தெரிவித்துள்ளார்.
| கொழும்பில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள்! பொல்லுகளுடன் தயார்நிலையில் படையினர் (Live) |