கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கும் தமிழக முதல்வர்
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் எடுத்து வருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழக முதல்வர், இலங்கை சிறைகளில் துன்பப்படும் இந்திய கடற்றொழிலாளர்களின் விடுதலையை உறுதி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார்.
தாம், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இதற்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது
எனினும், தமிழ்நாடு மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களை பற்றி கவலைப்படாத மத்திய பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் கச்சத்தீவு விவகாரத்தை மட்டுமே அரசியல்மயமாக்குகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள், தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கச்சத்தீவு மீதான இலங்கையின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி, நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



