ஜெய்சங்கரை சந்தித்த டில்வின் சில்வா - இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதி
இந்தியாவுக்கான ஐந்து நாள் விஜயத்தின் இறுதி நாளில், ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடெல்லியில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் நல்ல கலந்துரையாடலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னேற்றம்
நம்பகமான பங்காளியாக, இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்” என ஜெய்சங்கர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் “Know BJP” திட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், தில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஜேவிபி குழுவினர் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் ஆகியவை இந்த விஜயத்தின் நோக்கங்கள் என பிஜேபி தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் ஜேவிபி மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அதம்பாவா, மாவட்ட குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேச விவகாரத் துறை உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய விஜயத்தின்போது, பிஜேபி தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களையும் ஜேவிபி குழுவினர் சந்தித்துள்ளனர்.
ஜேவிபி குழுவினர்
இந்த சந்திப்புகளில் பிஜேபியின் அமைப்பு கட்டமைப்பு, அடிமட்ட உறுப்பினர் வலையமைப்பு மற்றும் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவையும் ஜேவிபி குழுவினர் சந்தித்துள்ளனர். அத்துடன், டெல்லி பிஜேபி அலுவலகத்திற்குச் சென்ற குழுவினரை டெல்லி பிஜேபி தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா வரவேற்றுள்ளார்.

பிஜேபியின் பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்புகள், இந்திய நாடாளுமன்றம் மற்றும் தேசிய போர் நினைவிடத்திற்கான விஜயங்களும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்திய கடற்றொழிலார்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் இலங்கை – இந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களும் பேசப்பட்டுள்ளன.
ஐந்து நாள் இந்திய விஜயத்தை ஜேவிபி குழுவினர் நிறைவு செய்யும் நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.