மீண்டும் பேசுபொருளாகியிருக்கும் துஷார உபுல்தெனிய! மீண்டும் பதவியில் அமர்த்த தயங்கும் அதிகாரிகள்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய விவகாரம், அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கடந்த வருட வெசாக் பௌர்ணமியின் போது ஜனாதிபதி பொது மன்னிப்பைப் பயன்படுத்தி ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டிருந்த அவர், விளக்கமறியல் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் அவருக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே தவறான குற்றச்சாட்டுகளின் பேரில் தான் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, உபுல்தெனிய நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
நீதிமன்றத்தீர்ப்பு
அவரது மனுவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரை மீண்டும் பதவியில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இதுவரை அவர் மீண்டும் முன்னைய பதவியில் நியமிக்கப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு இருந்தபோதிலும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் அதிகாரம் என்ன அறிவுறுத்தல்களை வழங்கினாலும், நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிப்பதற்கான இறுதி சட்டப் பொறுப்பு அரசாங்க அதிகாரிகளையே சாரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.