அரசாங்கம் இதை செய்யுமாக இருந்தால் வடக்கு; கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சியாகிவிடும் - துரைரெட்ணம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது இழுத்தடிக்குமாக இருந்தால் வடக்கு கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சியாகவும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்வதை விரும்பாத ஒரு கட்சியாகவும் தமிழ் மக்களினால் பார்க்கப்படும் நிலைமை ஏற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
வவுணதீவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் புதிய அரசு ஆட்சியமைத்து இரண்டாவது வரவு செலவுத் திட்டம் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனது ஆற்றல், அறிவுக்கெட்டிய வரையில் பல தசாப்தங்களுக்குப் பிறகு வீண்விரயம் இல்லாத, ஊழல் மோசடி இல்லாத அரசு, கட்சி, ஒரு நிர்வாகம் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளதென்பது கௌரவத்திற்குரிய, பாராட்டுக்குமுரிய விடயமாகும்.
பணவீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வலிகளில் இருந்துதான் இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்க வேண்டிய சூழல் இருக்கின்றது. ஆனால் இதற்கப்பால் ஒரு வீண்விரயமில்லாத வரவு செலவுத் திட்டம் என்ற ரீதியில் இதனை கௌரவிக்க வேண்டிய, பாராட்ட வேண்டிய தார்மீகக்கடமை இருக்கின்றது. தற்போதைய நிலையில் டொலர் உயர்ந்து கொண்டு சென்று பணவீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது.

இந்த பணவீக்கத்தைக் குறைக்கும் அளவிற்கு இந்தப் புதிய வரவு செலவுத் திட்டத்தில் வழிவகுக்குமா என்ற கேள்வியும் இருக்கின்றது. அரச உத்தியோகத்தர்களைப்.பொறுத்த வரையில் சிலருக்கு அடிப்படை சம்பளம் அதிகரித்தும் குறைந்தும், சிலருக்கு விசேட கொடுப்பனவுகள் அதிகரித்தும் குறைந்திருந்தாலும் பாமர மக்களுக்கான அடிப்படை விடயங்களை, தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றன.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடந்த வருடம் சுமார் 999 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் சுமார் 1050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் இயங்கி வருகின்ற நிலையில் அதனூடாக அபிவிருத்திகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் உள்ளூராட்சி மறங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 135 கோடி ஆகும். அதே நிலையில் இந்த வருடம் அந்த ஒதுக்கீடு சுமார் 250 கோடிகளைத் தாண்ட வேண்டும்.
இரண்டாவது பாதீடு
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இரண்டாவது பாதீடு மேசடியற்ற ஊழலற்ற நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடு என்பது கௌரவமான விடயம் என்பதுடன், அதற்கப்பால் கடந்த கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்களிலும், கடந்த கால வீதி அபிவிருத்தி விடயமாகவும் பொது மக்களால் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த இரண்டு வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீதிகள் சேதமுற்று மக்கள் நடமாட முடியாதளவிற்கு இருக்கின்றன. இந்த அரசு கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீதிகள் தொடர்பான மீள்பரிசீலனை ஒன்றை மேற்கொண்டு இதில் சம்மந்தப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், திணைக்களத் தலைவராக இருந்தாலும், ஒப்பந்தகாரராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலேயே எதிர்காலத்தில் மத்திய மாகாண உள்ளூராட்சி சபைகள் மூலம் உரிய முறையில் வீதி அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதல் நிதி

கடந்த காலத்தைப் போல மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவதில்லை என்பதும் ஒரு கவலையான விடயமே. இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குறித்த வரவு அஎலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் கவலையான விடயம். மாகாணசபை முறைமை என்ற விடயத்திலும் பலருக்குப் பல குழப்பங்கள் இருக்கின்றன.
இந்த மாகாணசபை முறைமை என்பது மக்களின் காலடிக்கு அதிகாரங்களைக் கொண்டு செல்லுகின்ற விடயம். இது விடுதலைப் புலிகளுக்கோ தமிழரசுக் கட்சிக்கோ ஈழமக்கள் விடுதலை முன்னணிக்கோ கொடுக்கப்படுகின்ற அதிகாரம் அல்ல. அந்த கட்சிகளும் அதிகாரங்களைக் கோரவில்லை. அவை கேட்பவை மக்களுக்கு இலகுவாக அதிகாரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |