முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை குறைப்பினை அடிப்படையாகக் கொண்டு முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில் முயற்சியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 60 ரூபாவிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதால் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் மெரில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு லீட்டர் பெட்ரோலில் முச்சக்கர வண்டியொன்று சுமார் 20 கிலோமீற்றர் பயணிக்க முடியும் எனவும், ஒரு லீட்டர் பெட்ரோலில் 60 ரூபாவை குறைப்பதன் மூலம் ஒரு கிலோமீற்றரை 3 ரூபாவினால் மாத்திரம் குறைக்க முடியும் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
டயர்களின் விலை அதிகரிப்பு
டயர்களின் விலை அதிகரிப்பு, பராமரிப்புச் செலவுகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மக்கள் முச்சக்கரவண்டி பாவனையை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை குறைப்பினால் முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு கிலோமீட்டருக்கு 3 ரூபா நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் ஏனைய உயர் செலவுகளுடன் ஒப்பிடுகையில் அது சொற்பமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் மெரில் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.