"தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி! கிழக்கிற்கு செயலாளர் பதவி வழங்க வேண்டும்"
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று ( 14.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாள் அவகாசம்
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் போட்டிக்களமாக இந்த உள்ளக விடயத்தை மாற்றி விடாமல் விட்டுக்கொடுப்புடன் ஏகமனதாக ஒரு தலைவரைத் தெரிவு செய்கின்ற பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும்.
இந்த விடயம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயா அண்மையில் தெரிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒருநாள் அவகாசத்தையும் கேட்டிருப்பதோடு, அதன் பின்னர் ஒரு ஜனநாயக ரீதியாக போட்டியின் அடிப்படையில் யார் தலைவர் என்பதை தெரிந்து கொள்வதற்காக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.
தற்போது பிரதேசக் கிளை உறுப்பினர்கள் வாக்களிப்பதன் ஊடாக அதிகளவு வாக்குகளைப் பெறுபவர்கள் தான் தமிழரசுக் கட்சியின் தலைவராக வரமுடியும் என முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி அதற்கான முடிவு ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்படும் என் நான் நம்புகின்றேன்.
எனவே தமிழ் தேசியம் சார்ந்து எமது முடிவுகளை நாங்கள் எடுப்பது மிகவும் பொருத்தமாக அமையும் என நான் நினைக்கின்றேன்.
தலைவர் பதவி
எனினும் கட்சியின் தலைவர் பதவிக்காகத்தான் போட்டி நிலவுகின்றது மாறாக செயலாளர் பதவிக்கான போட்டிகள் நிலவுவதாக எனக்குத் தெரியவில்லை.
வடக்கிற்கு தலைவர் பதவி கொடுத்தால் கிழக்கிற்கு செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனும் ஓர் தார்மீக சிந்தனை காணப்படுகின்றது.
எனவே, பொருத்தமானவர்களுக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டால் இலங்கை தமிழரசுக் கட்சியை சரியான திசையில் நகர்த்திக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |