மூன்று இலங்கையர்கள் இந்தியாவின் பெங்களூரில் கைது
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கை பிரஜைகளை இந்தியாவின் பெங்களூர் பொலிஸாரின் சிசிபி என்ற மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூவருக்கும் சாத்தியமான தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, காசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் என்ற மூன்று இலங்கையர்களையும், அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த ஜாக் எனப்படும் பரமேஷ் என்ற இந்திய நாட்டவரையும் கைது செய்தனர்.
பரமேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, சந்தேகநபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர் என்று இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
நுவன் மீது இலங்கையில் ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,
குமாருக்கு நான்கு மற்றும் பிரசாத் மீது இரண்டு தாக்குதல் மற்றும் கொலை
வழக்குகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தண்டனைச் சட்டம்
இவர்களிடம் இருந்து தொலைபேசிகள், ஆதார் அட்டை நகல் என்பன மீட்கப்பட்டுள்ளன இந்திய உள்ளூர் ஊடகங்களின்படி, ஐவரும் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவிலும் இலங்கையிலும் தொடர்புகளைக் கொண்ட ஜலான் என்பவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வசித்து வந்தனர்.
ஜலான் மத்திய கிழக்கு நாடான ஓமானில் முன்பு கைது செய்யப்பட்டார ஜலான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை மூன்று சந்தேக நபர்களும் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து சென்னையை வந்தடைந்துள்ளனர்.
எனினும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைகளுக்கு தெரியாமல் அவர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது தொடர்பில் இன்னும் தெளிவாக தெரியவில்லை. மூவரும் சென்னைக்குள் நுழைந்ததும், சாலை வழியாக பெங்களூரு சென்று 20 நாட்கள் கர்நாடக தலைநகரில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டினர் சட்டம் பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச்
சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




