இராணுவத்தின் கெப்டன் மற்றும் இராணுவத்தின் மூன்று உறுப்பினர்கள் கைது
புத்தளம் - நுரைச்சோலையில் பொதுமகன் ஒருவரை கடத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் கெப்டன் மற்றும் இராணுவத்தின் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ உடையை ஒத்த சீருடை அணிந்த நால்வர், நுரைச்சோலையில் வசிப்பவரை கடத்தி தாக்குதல் மேற்கொண்டு கடந்த ஜூன் 30 அன்று கடற்கரை ஓரத்தில் கிடத்தி சென்றதாக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இராணுவம் போன்ற சீருடை அணிந்த நால்வரும், பொதுமகன் ஒருவரும் தங்கள் வீட்டிற்கு வந்து, ஒரு இராணுவ அதிகாரியின் மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்காக தனது கணவரை விசாரிக்க விரும்புவதாக தெரிவித்தனர் என தாக்கப்பட்டவரின் மனைவி முறையிட்டிருந்தார்.
தமது கணவரான 38 வயது ராஜா ஸ்ரீ காந்தன், பின்னர் இளந்தடி பகுதி கடற்கரையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் இராணுவத்துக்கு அறிவித்த நிலையில், இராணுவ பொலிஸார் விசாரணை நடத்தி நான்கு பேரையும் பொலிஸில் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சேருநுவரயில் அமைந்துள்ள, இராணுவ முகாமில் பணியாற்றும் கெப்டன் மற்றும் மூன்று இராணுவ உறுப்பினர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
