வட்டுக்கோட்டையில் வாள்களுடன் மூவர் நடமாட்டம்! மக்களின் துணிகர செயல்
வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தி வந்த ஒருவர் ஊர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
சங்கரத்தை சந்தியில் நேற்று(01) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை தெற்கு மற்றும் மூளாய் பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.
அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர். அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.
பொலிஸார் விசாரணை
வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயை சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நபர் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிகிச்சையின் பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். மேலும்,இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.
மேலதிக செய்தி-தீபன்