50 வீத வாக்குகளை பெற போட்டியிடப்போகும் மூன்று முக்கிய வேட்பாளர்கள்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் (Presidential Electon) நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் 50 வீத அடிப்படை வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவியேற்கவேண்டும் என்ற நோக்கில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடும் தேசிய வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி வேட்பாளர்
யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் 50 சதவீத வாக்குத் தளத்தை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் அழைப்பு விடுத்து வருகிறார். எனினும், அவரால் இன்றுவரை 50 சதவீத வாக்குத் தளத்தைப் பெற முடியுமா? என்பது கேள்வியாகவே உள்ளது.
இதற்கிடையில் பிளவை எதிர்கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பு முக்கிய உறுப்பினர்கள் சிலர் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர். மற்றொரு தரப்பு தனது கட்சியின் சொந்த வேட்பாளரை விரும்புகிறது.
ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள வெறுப்பை வைத்து பார்க்கின்றபோது அந்த கட்சி தனி வேட்பாளரை களமிறக்காது என்றே எதிர்பார்க்கலாம். எனவே, தம்மை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மறைமுகமாக ஆதரவு வழங்குவதையே அந்தக்கட்சி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார். அவரது முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வாக்கு தளம்
2019இல், பிரேமதாச 40 சதவீத வெற்றியைப் பெற்றார். ஆனால் அவரது சொந்தக் கட்சியில் உள்ள பிரச்சினையால், இன்றுவரை அவருக்கு 50 சதவீத வாக்குகளை பெறமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) நாடு முழுவதும் பரவி வரும் ஆதரவை சாதகமாக பயன்படுத்தி கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் 50 சதவீத வாக்கு தளத்தை பெற முயற்சிக்கிறார்.
அவரது கட்சி ஆதரவு மற்றும் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, ஆனால் இன்றுவரை, கட்சி 50 சதவீத வாக்குகளை எட்டியதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பொதுவாக சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் மத்தியில் அனுரகுமாரவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது என்பது அவருக்கு தற்போது கிடைத்துள்ள சாதக நிலையாக உள்ளது.
இந்தநிலையில் விசாகப்பண்டிகைக்கு பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அரசாங்கத்தரப்பு தகவல்கள் கூறியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |