திருகோணமலையில் வெடி பொருட்களுடன் மூவர் கைது: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை
திருகோணமலை - சம்பூர் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட முயன்ற மூவர், நேற்று(16.01.2026) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பூர் கடற்பகுதியில் வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய படகொன்றை மறித்துச் சோதனையிட்ட போதே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதன்போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று டைனமைட் வெடிபொருள் கட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, டைனமைட் வெடிபொருட்கள், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு மற்றும் ஏனைய உபகரணங்களை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று(17.01.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடல் வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான வெடிபொருள் பாவனை குறித்து கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.