சக நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த சந்தேகத்தின்பேரில் மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் சக நண்பனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகத்தின்பேரில் இளைஞர்கள் மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் (05.02.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
உடையர்கட்டு வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாக்குவாதம்
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தவேளை, சக நண்பர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் உடலில் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளன.
வாக்குமூலங்களின் அடிப்படையில் பொலிஸ் விசாரணையினை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
கைதான இவர்களை நேற்றைய தினம் (06.02.2023) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
