புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள கட்டாக்காலி கால்நடைகளின் அச்சுறுத்தம் - பொதுமக்கள் விசனம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி, கர்ணன் குடியிருப்பு பகுதியில் நீண்டகாலமாக கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பிரதேச சபையில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கிராமங்களிலும் உள்ள கட்டாக்காலி கால்நடைகள் வீதிகளில் தங்கி விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், வணிக நிலையங்களை சேதப்படுத்தி விவசாய உற்பத்திகளையும் அழித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டக்காலி கால்நடைகளின் அச்சுறுத்தல்
இங்கு வசித்து வரும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிராம மக்கள் சார்பில் மனு ஒன்று பிரதேச சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்டாகாலி கால்நடைகளை பிரதேச சபை கட்டுப்படுத்துவதற்கு கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் ஒத்துழைப்பு வழங்கும் என்று கோரியும் ஒரு மாதம் கடந்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.