அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 12,500 பேர் குடியுரிமை பெற உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு வாக்குகளைப் பெறும் நோக்கில் திட்டமிடப்பட்ட திட்டம் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய குடியுரிமை
எனினும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் டோனி பர்க், இது நிறுவப்பட்ட நடைமுறையின்படி முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, இந்த விண்ணப்பங்கள் குறித்து கவனம் செலுத்தி, விரைவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே சமகால அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர்
அதற்கமைய, அவுஸ்திரேலியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பிராந்தியங்களில் உள்ள தொடர்புடைய குழுக்களுக்கு, கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர், உள்துறை அமைச்சர் டோனி பர்க், அவுஸ்திரேலிய குடியுரிமைச் சான்றிதழ்களை நேரில் வழங்க உள்ளார்.
இதில் இலங்கையர்கள் உட்பட பெருமளவு வெளிநாட்டவர்கள் குடியுரிமையை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.