அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் சி.ஐ.டிக்கு அழைப்பு! விமல் ஆதங்கம்
அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்படுகின்றார்கள் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(10.07.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொள்கலன்கள் விடுவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,"சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட பெரும்பாலான கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டமை பாரதூரமானது என்று நாங்கள் குறிப்பிட்ட விடயத்தையே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவும் குறிப்பிட்டுள்ளது.
குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும். பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டு மக்களுக்கு இதனை அறிவுறுத்தியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
பேச்சு சுதந்திரம் திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகின்றது. அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்படுகின்றார்கள்.
வாக்குமூலம்
முறையற்ற வகையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்ட விடயத்துக்காக கொழும்பு குற்றத் தடுப்புத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு சென்று வாக்குமூலம் அளித்துள்ளேன்.
அத்துடன் கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தில் இயல்பாகவே கொள்கலன்கள் விடுவிப்பில் நெரிசல் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட வகையில் நெரிசல் ஏற்படுத்தப்பட்டதா என்பதில் சந்தேகம் உண்டு என்றும் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனையே நாங்களும் குறிப்பிட்டோம்.
குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும். அரசின் முறைகேடான செயற்பாடுகள் இறுதியில் அரச அதிகாரிகள் மீது சுமத்தப்படுகின்றன. கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்திலும் இதுவே நேர்ந்துள்ளது."என தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
