கஜேந்திரகுமாரின் சமஸ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஸ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள்.
இதன்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஒரு மனுவை முதல்வர் அவர்களிடம் முன் வைத்துள்ளோம் இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை இலங்கை தேசத்திற்காக உருவாக்க உள்ளார்.
அந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் ஒரு கூட்டாட்சி நிர்வாக முறையை அரசமைப்பின் வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கூட்டாட்சி சட்டத்தை அரசியலமைப்பில் இணைப்பதற்கு இந்திய அரசின் தலையீடு இன்றியமைபாததாகவுள்ளது.

இந்திய அரசை தலையிட வைக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்கள் முன்வைத்த கோரிக்கை. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் நலன்களுக்காக புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை முதல்வர் இடத்தில் வழங்கினோம். அத்துடன் அது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினோம்.
இது முக்கியமான கால கட்டத்தில் நாம் விடும் கோரிக்கை. ஏற்கனவே இந்திய அரசு ராஜீவ்காந்தி காலத்தில் ஒரு ஓப்பந்தத்தை செய்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யவில்லை.
13 வது திருத்தம் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத திருத்தம். எனவே 13 வது திருத்தம் எங்களுக்கு உடன்பாடில்லை என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சமஸ்டி ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. இதனை விளக்கி பேசி முதலமைச்சரிடம் மனு கொடுத்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார்.