இதுவொரு பண்பாட்டுப் படுகொலை! ஒரு கொடூரத்தின் நேரடி சாட்சியம்
இலங்கையில் அன்னியர்கள் வருகைக்கு முன்பிருந்தே அறிவைப்பெருக்குதல், கற்றுக்கொடுத்தல் செயற்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறையில் இருந்திருக்கவில்லை.
அதன்பின் வரிசையாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என இலங்கையை கைப்பற்றிய அத்தனை வெளிநாட்டவரும் கூட வியாபாரநோக்கிலும் தமது மதத்தைப்பரப்புதல் என்பதிலுமே குறியாயிருந்தனர்.
அதற்காக அவர்களால் உருவாக்கபட்ட பாடசாலைகளிலும், நிறுவனங்களிலும் தமக்குத் தேவையான புத்தகங்களைப் பேணிப்பாதுகாத்து வைத்தனரே தவிர, பொதுவாக எல்லாப் பிரிவு மக்களும் சமமாக, இலவசமாகப் பாவிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் சுதேசியத்தை பாதுகாக்கவும் சைவ சமயத்தை ஊக்குவிக்கவும் எனப் பல முயற்சிகள் இங்கிருந்த சுதேசிகளால் முன்னெடுக்கப்பட்டன.
யாழ். பொதுநூலகத்தின் அடித்தளம்
1915 ஆம் ஆண்டு காரைநகரில் தோற்றம் பெற்ற சைவமாகசபையில் சிறிய நூலகமொன்று (1926) பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இலவசமாக சேவை வழங்கக்கூடிய ஒரு நூலகத்தின் தேவை குறித்து சிந்தித்த யாழ்ப்பாண நூலகத்தின் பிதாமகன் திரு க.மு செல்லப்பா அவர்கள் விதைத்த விதை பின்னாளில் யாழ்ப்பாண பொதுநூலகமாக நிமிர்ந்து நின்றது.
பல ஆலோசனைக் கூட்டங்கள், பகிரங்க கலந்துரையாடலுக்கான அழைப்புக்கள், நிதிசேகரிப்பு விளம்பரங்கள், நூல்கள் சேகரிப்பு, புத்தக அன்பளிப்பு, தளபாட வசதிகள், சந்தாமுறைகள், கட்டடத் தேர்வுகள் என பார்த்தப்பார்த்து ஒவ்வொன்றாக செய்து கடைசியில் தமிழ் மக்களின் அயராத கூட்டுறவாலும் முயற்சியாலும் அவர்களுக்கென ஒரு பொதுநூலகம் தோற்றம் பெற்றது.
ஆரம்பத்தில் மழவராயர் கட்டடத்தில் சிறிய அளவிலேயே செயற்பட்டு வந்தது. அதன் பின் யாழ்ப்பாண மாநகர சபையின் தோற்றம் பொதுநூலகத்திற்கு இன்னும் பலம் கொடுத்தது.
1954 ஆண்டில் நூலகத்திற்கான கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 22000 டொலரும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தால் 10,000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய நன்கொடையிலும் வெளிநாட்டு உதவிகளாலும கட்டடம் விரைவாக வளர்ந்தது.
1958ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17 ஆம் திகதியன்று இக் கட்டடத்திற்கு யாழ்ப்பாண பொதுசன நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டு, 1959ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.
தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியம்
புதிய நூலக கட்டடத்திற்குள் ஆரம்பத்தில் ஏறத்தாழ 16,000 நூல்கள் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தன.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த பல சஞ்சிகைகள் இருந்தன. பல அரும்பெரும் தொன்மை நூல்களும், சுவடிகளும் பக்குவப்படுத்தப்பட்டிருந்தன.
பின்நாட்களில் தமிழ் அறிஞர்களும் பண்டிதர்களும் தம்மிடம் இருந்த பழம்பெரும் புத்தகங்களை தாமாகவே முன்வந்து நூலகத்தில் சேர்ப்பித்தார்கள்.
அறிவை தேடிக்கண்டடைதல் பரவலாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கல்விச்செயற்பாடுகளுக்காகவும் ஆய்வுநடவடிக்கைகளுக்காகவும் நூலகத்தைப் பயன்படுத்தி சென்றார்கள்.
அந்தக் குறுகிய காலப்பகுதியிலேயே மக்களின் உற்சாகமான பங்களிப்பும் அறிஞர்களின் விடாமுயற்சியும் சேர்ந்து யாழ் பொதுநூலகத்தை தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாக மிளிரச் செய்தது.
கொளுத்திய தீயில் வெளிப்பட்ட கோரமுகம்
1981 ஆம் ஆண்டு. யூன் மாதத்தின் முதல் நாள். நள்ளிரவை நெருங்கும் நேரம், திடீரென யாழ். நகரின் மையப்பகுதியில் இருந்த யாழ்ப்பாண பொதுநூலகம் பற்றியெரிந்தது.
நூலகத்திற்கு இடப்பக்கமாக ஏறத்தாழ 500 மீற்றர் இடைவெளியில் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் கடமையில் இருந்தார்கள்.
நூலகத்திற்குப் பின்புறமாக துரையப்பா விளையாட்டரங்கில் யாழ்ப்பாண அபிவிருத்தி சபைதேர்தலை கண்காணிக்கவென தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த விசேட அதிரடிப்படையினர் தங்கியிருந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற அசம்பாவிதம் ஒன்றைக் காரணம் காட்டி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் அரச அல்லது பொலிஸ் அனுமதியின்றி யாரும் வெளியில் நடமாடமுடியாது.
அப்படியானதொரு சூழ்நிலையில், இறுக்கமான பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
அந்தப் பாதுகாப்பு வலயத்தினுள்ளிருந்த ஆசியாவின் அறிவுக்களஞ்சியம் அங்கிருந்த அத்தனை அரும்பெரும் புத்தகங்களோடு பற்றியெரிந்துகொண்டிருக்கின்றபோது அதை அணைக்க அருகிலிருந்த பாதுகாப்புத்தரப்பினர் யாருமே முன்வரவில்லை.
நேரடி சாட்சியம்
ஆயினும் இந்தக் கொடிய காரியத்தை யார் செய்தார் என்பதனை சாட்சியமாகச் சொன்னார், யாழ்.மாநாகரசபையின் முன்னாள் காவலாளியான திரு.ப.விக்னேஸ்வரன்.
“யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயிடப்பட்டு எரிவதாகத் தகவல் கிடைத்ததும் நாம் அங்கு சென்றபோது பொலிஸார் பின் மதிலால் ஏறிக் குதித்து அப்பால் போனார்கள். அதேசமயம் அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதுடன், நூல் நிலையத்தின் யன்னல் கண்ணாடிகளை நோக்கிக் கற்களை வீசினார்கள்” என அவர் சாட்சியமளித்தார்.
இவ்வாறு ஆசியாவின் அறிவுக்களஞ்சியம் இரவோடிரவாக அழிக்கப்பட்டு விட்டது. கிடைத்தற்கரிய பல ஆதி நூல்கள் இருந்த அடையாளமே தெரியாமல் சாம்பலாகிவிட்டன. தொண்ணூற்றேழாயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் ஒரு நொடிப்பொழுதிற்குள் இனி இல்லை என்றாயிற்று.
அத்தனை பொக்கிசங்களோடும் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நூலகத்தை பார்த்த அதிர்ச்சியில் மொழியியல் வல்லுனர் (33 மொழிகள்) கலாநிதி சிங்கராயர் தாவீது அவர்கள் மாரடைப்பால் இறந்தார்.
காடையர்களின் இந்த அறமற்ற அக்கிரமமான காட்டுமிராண்டித்தனமாக செயலை கேள்விப்பட்டு வடபகுதி முழுதும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. ஆயினும் யாரும் சரிந்து கிடக்கவில்லை.
துளிர்விட்ட நம்பிக்கை
போர், பொருளாதாரத் தடை, வறுமை என அத்தனைக்குள் அகப்பட்ட போதிலும், எரிந்து கிடந்த சாம்பல் மேட்டை கூட்டியள்ளி அதிலிருந்து புதிதாக மீள முளைக்க திடம் கொண்டது யாழ் நூலகம். மறுபடி எல்லாமே முதலிலிருந்து தொடங்கவேண்டும். தொடங்கினார்கள். எரிக்கப்பட்ட பழம்பெரும் நூல்கள் திரும்ப பெறமுடியாதவை தான். ஆனால் மனதின் நம்பிக்கை மீளவும் துளிர்விட்டது.
அறிஞர்பெருமக்கள், உதவும் நல்லுள்ளங்கள், பொதுமக்கள் உதவியோடு மீளவும் எழுந்தது யாழ்.நூலகம். தமிழினத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட பண்பாட்டு இனப்படுகொலையின் இரத்தச் சாட்சியாக எழுந்துநிற்கிறது. இப்போது நாம் பார்க்கின்ற, நன்கு உயர்ந்த மாடிக்கட்டத்தின் பின்னால், வெள்ளை சுவர்ப்பூச்சுகளிற்கு பின்னால், ஒரு அரச பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம் ஒளிந்திருக்கிறது.
தமிழர்கள் அறிவில் முன்னேறிவிடக்கூடாதென்ற படு கேவலமான ஒரு அசிங்க எண்ணம் மறைந்திருக்கிறது. எம் முன்னோர்களின் செழுமைப்படுத்தப்பட்ட இலக்கிய வடிவங்களையும் அவை கூறும் வாழ்வியல் முறைகளையும் ஆதாரமாக கொண்டு தமிழர்களை நாகரிகமடைந்த இனக்கட்டமைப்பாக, இந்த நாட்டின் சொந்தக்குடிகளாக உறுதிப்படுத்திவிட ஒரு சிறு இடம்கூட விட்டுவிடக்கூடாதென்ற காழ்ப்புணர்வு ஒட்டிக்கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தாம் செய்த இந்த அறிவுக்கொலையை ஒரு புதிய கட்டடத்தின் மூலம் சரிக்கட்டி ஏமாற்றிவிடலாம் என்ற ஏளனம் நிறைந்திருக்கிறது.
அதன் மாய வெளிப்பாடு தான் இன்று தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களிற்கு யாழ். நூலகம் ஒரு காட்சிப்பொருளாக காட்டப்படுவது.
சிலவேளை இனிவரும் எமது சந்ததியும் கூட அதன் வளர்ச்சி வேகத்தில், யாழ் பொது நூலகத்தின் பழைய வேதனைகளையும் வடுக்களையும் கண்டுகொள்ளத் தவறிவிடலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
