திருக்கோவில் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான அனுமதியை நிறுத்த வேண்டும்: கலையரசன் நடவடிக்கை
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி சங்கமன் கிராமங்களில் மலைகளை உடைந்து கல்குவாரி அமைப்பதற்கான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதனை இடைநிறுத்துமாறு தெரிவித்து கிராம மக்களின் சார்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டி.வீரசிங்க தலைமையில் இடம்பெற்றபோது இவ்விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கலையரசன் தெரிவிக்கையில், திருக்கோவில் பிரதேச செயலாளரின் அனுமதியோ, ஆலோசனைகளோ பெறாமல் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் சாதாரண குடிமகன் ஒருவர் அப்பிரதேசத்திற்குள் செல்லவும் முடியாது எதுவும் செய்து விடவும் முடியாது.
மக்கள் அடிப்படை அமைப்புகளின் நிலைப்பாடு
ஆனால், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் திணைக்களம் போன்றன பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் கல்குவாரிக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக நான் அறிகின்றேன்.
இது தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொது அமைப்பின் பிரதிநிதிகள் பல முறைப்பாடுகளை என்னிடம் முன்வைத்துள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறு தாண்டியடியில் கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது அங்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டது.
மக்கள் செறிந்து வாழுகின்றதும், கால்நடைகள் வளர்ப்பதுமான இடங்களாக இருப்பதால் பிரதேச செயலாளர் உட்பட நானும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து சில தடைகளைப் பிரதேச செயலாளர் ஏற்படுத்தினார்.
எனவே இந்தப் பிரதேசத்தில் இவ்வாறு மலைகள் உடைக்கின்ற, கல்குவாரி அமைப்பது தொடர்பான விடயங்கள் கையாளப்படுகின்ற போது இங்குள்ள பிரதேச செயலாளரின், மக்கள் அடிப்படை அமைப்புகளின் நிலைப்பாடுகளை அறிந்தே இதற்குரிய அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பாரிய பிரச்சினை எமது பிரதேசத்தில் எழுந்திருக்கின்றது.
பிரதேச மக்கள் முறைப்பாடு
எனவே இது தொடர்பில் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் தங்கள் கருத்துகளை வழங்க வேண்டும் என்பதுடன், இதனைத் தடைசெய்வதற்கான தீர்மானத்தையும் இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் இக் கல்குவாரி அமைப்பதால் ஏற்படுகின்ற பாதக நிலைமை குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் பொது அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பின் காரணமாக தற்போது நாட்டில் எவ்வித பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில். சூழலுக்குப் பாதமாக அமையும் இவ்வாறான கல்குவாரி அனுமதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அபிவிருத்திக் குழுத் தலைவரால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை இல்மனைட் அகழ்வினை தடை செய்து பிரதேச அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக வேலைகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்தனர்.
பிரதேச அபிவிருத்திக் குழுத் தீர்மானமே இறுதியானது இதனை மீறி யாரும் செயற்படுவார்களாக இருந்தால் பாதுகாப்புப் பிரிவினர் எதுவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிவிருத்திக் குழுத் தலைவரால் இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |