உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது ஆயிரம் முறை யோசிக்கவும் :கமல் மற்றும் சவேந்திரவிடம் பொன்சேகா கோரிக்கை
பொது மக்கள் நடத்தி வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது ஆயிரம் முறை சிந்தித்து பார்த்து செயற்படுமாறு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொன்சேகா, அமைதியான எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அது பாதுகாப்பு படையினரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனது கட்டளை மற்றும் தலைமையின் கீழ் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் மனிதாபிமான படை நடவடிக்கையில் படைப் பிரிவுகளை நீங்கள் வழி நடத்தினீர்கள்.
தற்போது நாட்டில் நடக்கும் மிகவும் அமைதியான சிவில் மக்களின் போராட்டத்தை ஒடுக்க மோசடியான ஆட்சியாளர்கள் வழங்கும் உத்தரவுகள் தொடர்பாக ஆயிரம் தடவைகள் சிந்தித்து பார்த்து செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
மோசடியான, வினைதிறன் இல்லாத அரச நிர்வாகம் காரணாக நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்வதற்கான நெருக்கடி காரணமாக சாதாரண மக்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அமைதியான, அகிம்சை வழியிலான போராட்டமாக மக்களை விதியில் இறக்கியுள்ளது.
தமது அதிகாரத்தை தற்கவைப்பதற்காக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை ஒடுக்குவதற்கு ராஜபக்ச அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் அது மிகவும் அருவருப்பான உலகின் அதிருப்திக்கு உள்ளாக்கும் செயலாகவே இருக்கும்.
எனது தலைமையின் கீழ் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட படை வீரர்கள் என்ற வகையில் உலகத்திற்கு முன்னால், அவப்பெயருக்கும் அதிருப்திக்கு உள்ளாவீர்கள் என நான் எதிர்பார்க்க மாட்டேன்.
இதனால், மோசடியான ஆட்சியாளர்கள் வழங்கும் மக்கள் விரோத அநீதியான உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் முன் ஆயிரம் தடவை சிந்தித்து பாருங்கள் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
காலிமுகத் திடல் உட்பட நாட்டில் பல இடங்களில் நடக்கும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் கலக தடுப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri