இலங்கை விவகாரத்தில் பிற நாடுகள் முன்வைத்த விமர்சனங்கள்: ஜி.எல்.பீரிஸின் நூல் எடுத்துரைத்துள்ள விடயம்
இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வெளிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரிஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் காலப்பகுதியில் பெண்களின் நிலை
மேலும் அந்த நூலில் கூறப்படுபடுவதாகவது,
யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினராக பெண்களே உள்ளனர். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் மத்தியில் அவர்களின் வாழ்க்கை வெகுவாக மாற்றமடைந்தது.

ஆண்கள் மத்தியில் மரணங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் அதிகரித்தமையானது, விதவைகள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அடிப்படை வாழ்வில் மாற்றங்களை வலிந்து திணித்தது.
பொருளாதார சுமை அதிகரித்து அடக்குமுறையானது, குடும்பங்களை வழிநடத்தும் கட்டாயத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பங்கு அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமே தனித்த அல்லது ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அங்கு இருக்கவில்லை.
முடிவற்ற பரவலான வாழ்க்கையை மாற்றும் தாக்கம் மற்றும் அழுத்தங்கள் ஊடுருவி, ஸ்தாபிக்கப்பட்டிருந்த சமூக நடத்தை முறைமைகளை அச்சுறுத்தும் காரணிகளாக அமைந்தன.
தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கான தாயாகின்றன. தைரியம் மற்றும் மீண்டெழும் தன்மைக்குத் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக வெளிப்படுத்திக் கொண்ட பெண்கள், துரதிஷ்டத்திலிருந்து வாய்ப்பினை அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவின் பங்கு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாரம்பரிய உறவுகளின் ஆதரவின்றி பெண்கள் புதிய வாழ்க்கை முறையில் கடினமான சவால்களை எதிர்கொண்டனர்.
பொருளாதார வாழ்வாதாரத்திற்கும், கலாசார மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆதரவிற்கும் புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இவை, பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பின் சுமையை குறைப்பதற்குப் பதிலாக, மேலும் அதிகரிக்கவே வழிவகுத்தன. வாழ்வாதாரப் போராட்டத்தில், பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதனால் பாரம்பரிய மனப்பான்மையுள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான புரிதல் குறைந்ததால் புதிய சிந்தனையுடன் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டியேற்பட்டது.
மறுகட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் முழுமையான செயன்முறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதில் இந்தியா ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.
கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களிலும் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கரிசனை அதிகரித்திருத்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டின் இந்தியா - இலங்கை உடன்படிக்கையில் இது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

மேலும், இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது. உள்நாட்டின் சூழ்நிலைகள், இந்தியாவை சமாதானச் செயன்முறையில் முக்கிய வகிபாகத்தை முன்நகர்த்துவதில் தடுத்த போதிலும் இந்தியா அந்த விடயத்தில் நீடித்த கரிசனையை எப்போதும் காண்பித்தது.
மத்தியஸ்தம் வகித்த நோர்வே
இந்திய அமைதிப்படை மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த பரவலான அதிருப்தி காணப்பட்ட போதிலும், இலங்கையில் பெரும்பான்மையினரிடமும், இந்தியாவின் உறுதியான பங்குபற்றலை வரவேற்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்களவில் இருந்தது.
அதே போன்று, நோர்வே, மத்தியஸ்தம் வகித்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விமர்சித்தவர்களும், வெளிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. இலங்கையின் சூழலில் வெற்றிகரமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இதன் சில கூறுகள் அவசியம் என்பதை உண்மையில் உணர்ந்தமை மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நடந்த நிகழ்வுகளை அலசி ஆராயும் முக்கிய நூலாக இந்த நூல் விளங்குவதுடன் சமாதான கால அரசியலையும் வரலாற்றையும் பேராசிரியர், சிரேஷ்ட அரசியல் ஆளுமை, சட்டவியல் அறிஞர் என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரின் குறிப்பேட்டிலிருந்து அறிய விரும்பும் அரசியல் வரலாற்றுத் துறை கல்வியியலாளர்கள், இராஜதந்திரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்னும் அனைவருக்கும் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை இந்த நூல் மீள் நினைவூட்டுகின்றது.
ஆங்கிலமொழியிலான இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சட்டபீடத்தின் தகைசார் பேராசிரியருமாவார். ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழம் உள்ளிட்ட உலகின் பல புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்த இலங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் இவர் ஒருவராக திகழ்கின்றார்.
வெளிவிவகாரம், நீதி, அரசியலமைப்பு விவகாரம், இன விவகாரம், தேசிய ஒருமைப்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் அமைச்சரவையில் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல் ஆளுமையாகவும் ஜீ.எல்.பீரிஸ் திகழ்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-கஜிந்தன்