திலினிக்கு உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது எப்படி - வசந்த சமரசிங்க கேள்வி
பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு உயரடுக்கு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய உயரடுக்கு பாதுகாப்பு ஒரு மோசடியாளருக்கு எப்படி கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜானகி சிறிவர்தனவிடம் முதலீடு
திலினியிடம் பணம் முதலீடு செய்ததாக சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் பெயர் பட்டியலில் தன்னையும் சேர்த்து தனது கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தனது பணம் ஜானகி சிறிவர்தனவிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜானகி சிறிவர்தன நாமல் ராஜபக்சவின் நெருங்கிய தோழி எனவும் திலினி பிரியமாலி இரகசிய பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.