அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை! அநுர அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்.நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்ற தமிழரசு கட்சியும், அநுர அரசும் சேர்ந்து தான் கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
நல்லூர் திலீபன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை நேற்று (26.9.2026) இரவு பொலிஸார் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளர் எஸ்.கஜேந்திரன் இன்று(27.9.2026) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 18ஆம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ்.மாநகரசபை மேஜரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நான் சி.கே. சிவஞ்ஞானம் உடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார்.நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26 ஆம் திகதியோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என என்னிடம் தெரிவித்தார்.

நான் எதிர்பாக்கவில்லை .இவர் இவ்வளவு கீழ்த்தரமாக செய்வார் என்று. எனவே இவர் நிச்சயமாக பொலிஸாரை ஏவி பொலிஸாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது.
தமிழரசு கட்சியும் அநுர அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள்.இந்த சம்பவத்துக்கு பின்னால் சி.வி.கே.சிவஞ்ஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.
அத்துடன் இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.