தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று(15) ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில்
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் நினைவேந்தல்
தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று(15) இடம்பெற்றது.
குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சியில் நினைவேந்தல்
38ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று(15) இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினார்.
இதனை அடுத்து பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நமது அஞ்சலியை செலுத்தினர்.
யாழ் தீவகம்- வேலணை
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணைப் பிரதேசபையின் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














