தமிழர் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 35வது நினைவேந்தல் (Photos)
தியாகி திலீபனின் 35வது நினைவு தினம் இன்றாகும். தமிழர் பகுதியில் பல்வேறு இடங்களில் தியாகி திலீபனின் நினைவேந்தல் தமிழ் மக்களினால் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா
தியாகி திலீபனின் 35வது நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (26) அனுஷ்டிக்கபட்டது.
அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற நினைவேந்தலில் தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தி: ஷான்
மன்னார்
மன்னாரில் இன்றைய தினம் (26.05.2022) காலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மத தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி: ஆஷிக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தியாகதீபம் திலீபனின் 35 நினேவந்தல் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணவதிப்பிள்ளை குககுமரராஜா தலைமையில் இந் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனி உயிர்நீத்த காலை 10.48 மணிக்கு அவரின் திரு உருவ படத்திற்கு மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்ற அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் அன்னாரின் திரு உருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து பூ தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி: பவன், ராகேஷ்
மட்டக்களப்பு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்கள் தங்களிடமே தந்துள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நினைத்துக்கொண்டு இவ்வாறான தியாகிகள் நிகழ்வுகளில் தனித்துசெயற்பட முனைவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்று(26.09.2022) மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வூபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கி.துரைராஜசிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதி தலைவர் நகுலேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றது.
செய்தி : குமார்
மன்னார்
தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள் இன்றைய தினம் (26.09.2022) மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் இன விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரதம் இருந்து இதே நாளில் உயிர் நீத்தார் தியாக தீபம் திலீபன். அவருடைய தியாகத்தை மதித்து உளப்பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் செயலாளரும் நகரசபையின் உப தவிசாளரான ஜான்சன் பிகிராடோ தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
அஞ்சலி நிகழ்வின் பிரதான ஈகைச் சுடரினை முன்னாள் போராளி ஒருவர் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.
அதனை தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் அணிதிரண்டு உணர்வு ரீதியாக மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : ஆஷிக்
முல்லைத்தீவு
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த சங்கத்தின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிலையங்களும் இன்று பூட்டப்பட்டு வணிகர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன், சமூக செயற்பாட்டாளர் ச.றூபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
பொதுச்சுடரின் மாவீரர் ஒருவரின் தந்தை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர்பகுதியில் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னால் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வணிகர்கள் பொதுச்சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தந்தை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகர் பகுதி
இதேவேளை முல்லைத்தீவு நகர் பகுதியில் பொதுச்சந்தை வளாகத்திற்கு முன்பாக தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மற்றும் சந்தை வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தீலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு உணர்பூர்வமாக நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்தும் ஏற்பாட்டாளர்களுக்கு புலனாய்வாளர்களின் மறைமுக அச்சுறுத்தலுக்கு மத்தியில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
உடையார் கட்டில் நடைபெற்ற நிகழ்வில் முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் உரையில்,
"திலீபனின் கோரிக்கைக்கள் நியாயமானது இன்று வரலாற்றினை தெரியாதவர்கள் வரலாற்றினை புரிந்து கொள்ளாதவர்கள் பலவாறு கூறுகின்றார்கள்.
தியாகி திலீபன் அவர்கள் மாகாண சபையின் உடைய சரத்துக்களை சரியாக நிறைவேற்றுங்கள் என்ற கோரிக்கையும் முக்கியமாக இடம்பெற்றது.
ஆனால் இன்று வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றினை கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக சில விடயங்களை கூறுகின்றார்கள்.
மாகாணசபையினை புலிகள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. என்பதற்காகத்தான் போராட்டத்தினை ஆரம்பித்தார்கள் என்பதை ஒவ்வொருதரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் என்ன விடயங்கள் சொல்லப்பட்டதோ அவை சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என்கின்ற ஆதங்கங்களும் அதனை எதிர்த்துத்தான் முக்கியமான கோரிக்கையாக திலீபனின் கோரிக்கை இருந்தது.
இன்று புலிகள் மாகாணசபையினை ஏற்கவில்லை என்று சொல்லி போராடி வருகின்றார்கள். இது முற்றிலும் பொய்யான வரலாற்றினை திரித்து கூறுகின்ற நிகழ்வாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
செய்தி: கீதன்