நினைவு கூரும் உரிமையும் திலீபனின் சிலையகற்றலும்..!
யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவஞ்சலி உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட சம்பவம், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளையும் அவர்களின் தியாக உணர்வுகளையும் பிரதிபலிக்கும் சின்னங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள், தமிழ் மக்களின் அடிப்படை நினைவேந்தல் உரிமையை நசுக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றன.
தியாகதீபம் திலீபனின் நினைவஞ்சலி
சிலை அகற்றப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, தியாகதீபம் திலீபன் தனது உண்ணாநோன்பை மேற்கொண்ட நல்லூர் தியாகதீபம் நினைவிடத்திற்கு முன்பாக மக்கள் திரண்டு தங்களின் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
"எங்கள் நினைவுகளை அழிக்காதே", "நினைவேந்தல் உரிமை எங்கள் அடிப்படை உரிமை" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் நல்லூரோடு மட்டும் நின்றுவிடவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் உடனடியாகப் பரவியது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிவில் அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் வீதிப்போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அகற்றப்பட்ட சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் உரக்க வலியுறுத்தினர். தாயகத்தில் வெடித்த இப்போராட்டத்தின் எதிரொலி புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் தேசங்களிலும் பலமாக ஒலித்தது.
குறிப்பாக பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் உள்ள நாடாளுமன்ற சதுக்கம் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து பேரணிகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்றன. ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இது தொடர்பில் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமை
சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு, இலங்கையில் தமிழர்களின் மனித உரிமைகளையும் நினைவு கூரும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனப் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நினைவு கூரும் உரிமை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமை.

ஒரு போரினால் பாதிக்கப்பட்ட சமூகம், தனது இழப்புகளையும் தியாகங்களையும் நினைவுகூர்வது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி மறுக்க முடியாத அடிப்படை உரிமையாகும் (Right to Remember). நினைவேந்தல் என்பது வெறும் அரசியல் சார்ந்த நிகழ்வு அல்ல; அது போரில் உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் கண்ணீர் சிந்தி, தங்கள் ஆத்மார்த்த அஞ்சலியைச் செலுத்தும் புனிதமான நிகழ்வு.
அரசியல் ரீதியான அடக்குமுறைகள் மற்றும் பொலிஸாரின் தலையீடுகள் மூலம் நினைவுக் குறியீடுகளை அகற்றுவது தமிழ் மக்களின் மனக்காயங்களை மேலும் ஆழமாக்குமே தவிர, ஒருபோதும் நிரந்தர அமைதியையோ அல்லது நல்லிணக்கத்தையோ ஏற்படுத்தாது.
அடக்குமுறைகள் தீவிரமடையும் போதெல்லாம் தமிழ் மக்களின் போராட்டக் குரல் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மேலும் வலுப்பெறும் என்பதையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 15 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri