திலீபனின் நினைவேந்தல் ஒரு கட்சிக்குரியதல்ல, பொது அமைப்பாகவே முன்னெடுக்கவேண்டும்..! சி.அ.யோதிலிங்கம்
தியாகி திலீபனது நினைவேந்தல் ஒரு அரசியல் கட்சிக்குரியதல்ல, அது ஒரு பொது அமைப்புக்களுக்கூடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து மரணித்த திலீபன் நினைவேந்தல் வடக்கு கிழக்கு எங்கும் உணர்வு பூர்வமாக நடந்து முடிந்திருக்கின்றது.
திலீபன் உண்ணாவிரதம்
திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்து செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு மரணித்தார். மருத்துவர் சிவகுமாரன் உடலைப் பரிசோதித்து மரணத்தை உறுதிப்படுத்தினார்.
திலீபனின் உடல் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திலீபன் உண்ணாவிரதமிருந்த காலம் இந்திய அமைதிப்படை இங்கு நிலை கொண்டிருந்தது.
திலீபன் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். அரசியல் கைதிகள் விடுதலை, சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல், இடைக்கால அரசு உருவாகும் வரை புனர்வாழ்வு வேலைகள் நிறுத்தப்படல், வடக்கு – கிழக்கில் சிறீலங்கா அரசின் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்படல், ஊர்காவற்படையின் ஆயுதங்கள் திரும்பப் பெறல் உட்பட இராணுவ முகாம்கள் மூடப்படல் என்பனவே ஐந்து கோரிக்கைகளுமாகும்.
திலீபன் உண்ணாவிரதமிருந்த காலம் 15ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை இருப்பதால் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நினைவேந்தல் வாரமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இறுதி நாள் நிகழ்வு நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத்திடலில் 26 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. திலீபனின் உயிர் பிரிந்த நேரம் முற்பகல் 10;.48 க்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
இளைஞர்; ஒருவர் வழமை போலவே தூக்குக் காவடி எடுத்திருந்தார் மக்கள் திரளாகப் பங்குகொண்டிருந்தனர். நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத் திடலில் நினைவேந்தல் நிகழ்வினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே ஒழுங்கு செய்திருந்தனர்.
மக்கள் வரிசையாகச் சென்று நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அருகில் உள்ள இன்னோர் திடலில் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் திலீபனின் வரலாற்றைக் கூறும் கண்காட்சியை நடாத்தியிருந்தனர். அக்கண்காட்சியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாள் நிலையும் அழகான மொழியில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணி அண்மைய சில ஆண்டுகளாக இக்கண்காட்சியை நடாத்தி வருகின்றது.
திலீபனின் மார்பளவு சிலை
இந்தத் தடவை சிறப்பு அம்சமாக திலீபனின் மார்பளவு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
அந்தச் சிலை திலீபனைப் போல இருக்கவில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் புகைப்படம் அடங்கிய நினைவு ஊர்தியை தமிழ்ப் பிரதேசங்களில் ஊர்வலமாக கொண்டு சென்றது. மக்கள் ஆங்காங்கே அதற்கு அஞ்சலி செலுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.
ஊர்தி கிழக்கு மாகாணத்திற்கு சென்றதாக தெரியவில்லை. இன ரீதியான அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். படையினர் நினைவேந்தலைக் குழப்பியதாக பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. திருகோணமலையில் மட்டும் நினைவேந்தல் திடலில் வைக்கப்பட்ட திலீபனின் உருவப்படம் சிதைக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
அரசியல் கட்சிகளைச சேர்ந்தவர்களும்;, சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆங்காங்கே நினைவு கூரலை அனுஸ்டித்திருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தியதோடு இரத்ததான முகாம் ஒன்றையும் திலீபனின் நினைவாக நடாத்தியிருந்தனர்.
திலீபன் நினைவாக கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றிருந்தது.
ஆய்வாளர் நிலாந்தன் “தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களின் வகிபங்கு” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். சில பிரதேசங்களில் உள்;ராட்சிச் சபைகளும் இதில் அக்கறை காட்டியிருந்தன. பருத்தித்துறை நகரசபையின் அக்கறை இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக இருந்தது. அரசியல் கட்சிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் களத்தில் பணியாற்றியிருந்தன.
ஏனைய கட்சிகள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியதாக தகவல் இல்லை. சுமந்திரன் நல்லூர் நினைவுத்திடலுக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
கண்காட்சியையும் பார்வையிட்டிருந்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இதில் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. வழமை போன்று இந்தத் தடவையும் சச்சரவுகளுக்கு குறைவு இருக்கவில்லை. குறிப்பாக நல்லூர் நினைவுத்திடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேலாதிக்கம் ஏனைய தரப்பிடையே விவாதங்களைக் கிழப்பியிருந்தது.
இது தொடர்பாக இரு வருடங்களுக்கு முன்னர் நினைவேந்தலில் தள்ளு முள்ளுகளும் இடம் பெற்றன. சிலர் எரி காயங்களுக்கும் உள்ளாகினர்.
நினைவேந்தல் பொது நிகழ்வாக நடத்தப்படல் வேண்டும் ஒரு கட்சி மட்டும் ஆதிக்கம் செலுத்துவது ஏற்கத்தக்தல்ல என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. பொது அமைப்பு ஒன்று முன்னெடுக்கும் போது பொது நிறுவனங்கள் மட்டுமல்ல கட்சிகளும் ஆர்வமுடன் பங்கேற்கும் நிலை உருவாகும். கட்சி முரண்பாடுகளும் அங்கு மேலெழும்பாது.
குறைந்;தபட்சம் கட்சிகளும், பொது அமைப்புகளும் இணைந்து ஒரு நினைவேந்தல் குழுவை உருவாக்கி அதனை மேற்கொண்டிருக்கலாம்.
அவ்வாறு ஒழுங்குபடுத்தினால் நினைவேந்தல் நிகழ்வு சர்ச்சைகள் பெரியளவிற்கு இல்லாமல் போயிருக்கும். நினைவேந்தல் நிகழ்வுகள் ஓர் அடையாளச் செயற்பாடாக மட்டும் இருக்கக் கூடாது. பேரெழுச்சியாக இருக்க வேண்டும். பொது அடையாளத்துடன் முன்னெடுக்கும் போது பேரெழுச்சி தானாக உருவாகும். “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டமும் செம்மணியில் இடம்பெற்ற “அணையா விளக்கு” போராட்டமும் மக்கள் எழுச்சிகளாக இருந்தன.
“எழுக தமிழ்” போராட்டங்கள் கட்சிகளும், பொது அமைப்புகளும் இணைந்து முன்னெடுத்தன. தமிழரசுக் கட்சி பங்குபற்றாத போதும் அது பேரெழுச்சியாக இருந்தது. நினைவேந்தல் நிகழ்வுகள் வரலாற்றை புதிய தலைமுறைக்கு கடத்தும் ஊடகங்கள் மக்களைத் தமிழ்த் தேசிய உணர்வுடன் வைத்திருக்கும் ஒரு கருவி. மக்களின் கூட்டுத் துக்கத்தை ஆற்றுப்படுத்தும் ஆலயம்.
தியாகி திலீபனின் ஆவணக் காட்சியகம்
கொள்கைப் பிடிப்பை உருவாக்கும் வரலாற்று ஆவணம். இந் நிகழ்வுகளில் மக்கள் அனைவரும் தாமாக முன் வருவதும் பேரெழுச்சியாக இருப்பதும் அவசியம். இந்தப் பேரெழுச்சி தாயகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம் பெற வேண்டும்.
கிராமங்கள் அந்த வாரம் முழுவதும் வாழை, தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தின் மையத்தில் திலீபனின் உருவப்படத்தை வைத்து அஞ்சலிப்பதாக இருக்க வேண்டும். கிராமங்கள் தாங்களாக முன்வந்து திலீபனின் நினைவாக பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவதாக இருக்க வேண்டும். உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் கிராமங்களின் பொது நிறுவனங்களுடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்யலாம்.
இந்தத் தடவை நல்லூர் கண்காட்சித் திடலில் தியாகி திலீபன் ஆவணக் காட்சியகம் “வினாடி விடை போட்டியை” நடாத்தியமை வரவேற்கத்தக்கதாகும். முன்னர் தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியினரும் சித்திரப்போட்டியை ஒழுங்கு செய்திருந்தனர். இந்தத் தடவை முதலாவது சர்ச்சை கண்காட்சி தொடர்பாக தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியினருக்கும், தமிழ் மக்கள் கூட்டணியினருக்குமிடையே ஏற்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியினர் தியாகி திலீபனின் ஆவணக் காட்சியகம் என்ற பெயரில் கண்காட்சியை அண்மைய சில வருடங்களாக திலீபன் நினைவிடத்திற்கு அருகில் உள்ள திடலில் நடாத்தி வருகின்றனர்.
இந்தத் தடவை திடலுக்கான அனுமதியை மாநகர சபையிடம் பெற்றுக் கொள்வதற்கு முன்னரே தமிழத் தேசிய மக்கள் முன்னணியினர் அத்திடலுக்கும் சேர்த்து அனுமதியைப் பெற்றிருந்தனர். தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணன் இதனை எதிர்த்து ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தினார்.
அந்த திடலையும் சேர்த்து அனுமதியைப் பெற முயற்சித்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சிலரே “தேவையற்ற பிரச்சனைகளுக்குச் செல்ல வேண்டாம்” எனக் கூறியிருந்தனர்.
நினைவேந்தல்
நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்கள் அந்த ஆலோசனையைக் கவனத்தில் எடுக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தலைப்பில் எழுதப்பட்ட கடிதம் மூலமே மாநகர சபையிடம் அனுமதி பெறப்பட்டது.
சட்டத்தரணி மணிவண்ணன் கடுமையான எதிர்ப்பினை மாநகரசபைக்குத் தெரிவித்ததால் மாநகரசபை இருதரப்பையும் சமரசம் செய்து கண்காட்சி திடலை மணிவண்ணன் தரப்பிடம் ஒப்படைத்தது. இந்தத் திடலை வழங்கும் செயற்பாட்டின் தாமதம் காரணமாக செப்டெம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டிய கண்காட்சி ஐந்து நாட்கள் தாமதமாக 20 ம் திகதியே ஆரம்பிக்கப்பட்டது.
மணிவண்ணன் முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்தவர். இதனை சிலர் சைக்கிளின் முன் சில்லும் பின் சில்லும் சண்டை பிடிபடுகின்றன எனக் கேலி செய்தனர். இரண்டாவது சர்ச்சை அமைச்சர் சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தச் சென்றபோது ஏற்பட்டது. தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அவரை அஞ்சலி செய்ய விடாது தடுத்திருந்தனர்.
அதற்கு தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான ஆளும் கட்சியினரை அஞ்சலி செலுத்த விட முடியாது எனக் கூறப்பட்டது. அமைச்சர் சந்திரசேகரன் இதனை எதிர்த்து ஊடவியலாளர் மாநாட்டை நடாத்தியிருந்தார் அதில் “சண்டியர்கள் இல்லாத போது நொண்டியர்கள் சண்டியர்களாக வலம் வருகின்றனர்” எனக்கூறியிருந்தார்.
அவர் இரண்டாவது தடவை அஞ்சலி செலுத்தச் சென்ற போது தடைகள் எதுவும் இருக்கவில்லை என்றும் முன்னர் தடுத்தவர்கள் பார்வையாளர்களாக நின்றனர் என்றும் சந்திரசேகரன் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் நடந்தது எனக் கேள்விப்பட்ட உடனேயே இக்கட்டுரையாளர் ஊடகச் சந்திப்பொன்றில் “இது மோசமான தவறு. திலீபனின் நினைவுத்திடல் என்பது பொதுப் பிரதேசம்;. எதிரிகளுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கு உரிமையுண்டு.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் உடனடியாக சந்திரசேகரனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சந்திரசேகரன் அஞ்சலி செலுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும”; எனக் கூறியிருந்தார்.
காட்சி ஊடகங்கள் பலவும,; வலைத்தளங்களும் இக் கருத்தினை முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சிலர் இக்கருத்துக்கு எதிராக வலைத்தளங்களில்; பதிவிட்டிருந்தனர். அவ்வாறு பதிவிடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்ற போதும் இக்கட்டுரையாளர் அவர்களது எதிர்க் கருத்துக்களை ஏற்கவில்லை. இத்தனைக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசியலுடன் கட்டுரையாளருக்கு உடன்பாடு எதுவும் கிடையாது.
தனது பல கட்டுரைகளில் அதனை வெளிப்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
சந்திரசேகரன் தடுக்கப்பட்டமை தொடர்பாக பல ஊடகங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு வலைத்தளங்களும்; கண்டனங்களைப் பதிவிட்டிருந்தன. எதிரிகளும் அஞ்சலி செலுத்துவது திலீபனின் மகிமையை மேன்மைப்படுத்தும் என்பதே கட்டுரையாளரின் கருத்தாக இருந்தது. ; சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தச் சென்றதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம் என்பது உண்மையே! ஜெனிவாவில் பொறுப்புக் கூறலின் கனதியைக் குறைத்தல், தமிழ் மக்களின் ஆதரவைத் தக்க வைத்தல் என்பன காரணங்களாக இருக்கலாம்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மையப் பிரச்சினைகளான அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல், ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல், காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர்; விவகாரம் போன்ற நிலை மாறுகால நீதிப் பிரச்சினைகள் என்பவற்றைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று இல்லை.
வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றவாசிகள் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை அடாத்தாகப் பறித்த போது அரசாங்கம் எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசிய சக்திகள்
அவர்கள் இன்று பயிர் விதைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். படையினர் பறித்த காணிகளில் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை.
எனவே இந்த ஆற்றலின்மை காரணமாக தமிழ் மக்களின் ஆதரவை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்காக வேறு உணர்வு பூர்வமான களங்களை தேசிய மக்கள் சக்தியினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இடத்தில் அவர்களுக்கு கிடைத்த களங்கள் தான் இந்த நினைவு கூரல் மையங்கள். இந்த இடங்களில் அஞ்சலி செலுத்துவதன் மூலம் மக்களின் உணர்வு பூர்வமான ஆதரவைப் பெற முயல்கின்றனர்.
திலீபனின் நினைவுத்திடலில் மட்டுமல்ல அணையா விளக்குப் போராட்டத்திலும் சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தார். அஙகும் திருப்பி அனுப்பப்பட்டார். சந்திரசேகரனைப் பொறுத்தவரை அஞ்சலி; செலுத்துவதை தடுத்தாலும் வெற்றிதான். தடுக்காவிட்டாலும் வெற்றிதான். தடுக்காமல் விட்டால் மக்களின் ஆதரவைப் பெறுவார் அதனூடாக தேசிய மக்கள் சக்தி சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ளும்.
தடுத்ததை சரியென்று கூறுபவர்கள் சந்திரசேகரன் இன வாத நிகழ்ச்சி நிரலுடன் அஞ்சலி செலுத்த வந்தார் எனக் கூறுவதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. தடுத்தால் மக்களின் அனுதாபத்தைப் பெறுவார் இந்தத் தடுப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் கணிசமான அனுதாபத்தை சந்திரசேகரன் பெற்றிருந்தார் என்பது உண்மையே! தடுக்காமல் விட்டிருந்தால் சிறிய செய்தியுடன் அது கடந்திருக்கும்.
பெரியவாதப்பிரதி வாதங்களை உருவாக்கியிருக்காது. திலீபனின் ஆவணக்காட்சியகத்தை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டிருந்தார். திலீபனின் உருவச்சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார் இது சிறிய செய்தியுடன் கடந்து போனது.
சந்திரசேகரன் தடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. தேசிய மக்கள் சக்தி விரித்த வலைக்குள் விழுந்தமை, தமிழ்த் தேசிய சக்திகளை ஆதரவாகவும், எதிராகவும் இரு கூறுகளாகப் பிரித்தமை, நினைவேந்தலின் மகிமை குறைக்கப்பட்டமை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகிமை குறைக்கப்பட்டமை முக்கிய பாதிப்புக்களாகும். இவை பற்றி விரிவாக எழுதுவதற்கு கட்டுரை இடம் தராது.
எனவே தமிழ்த் தேசிய சக்திகள் இவற்றையும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் நினைவு கூரல்களை ஒழுங்கு செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
