மட்டக்களப்பு- மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் உடைத்து தங்க ஆபரணங்கள் திருட்டு
மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த தங்க ஆபரணங்கைளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான மடத்திற்கு கடந்த 8ஆம் திகதி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று அதனை நிறுத்தி வைத்து விட்டு மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து ஒருபவுண் தங்க சங்கிலி, ஒரு கிராம் மோதிரம் மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை வைத்து பூட்டிவிட்டு மடத்துக்குள் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் திரும்பி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணம் மற்றும் பணம் திருட்டு போயுள்ளதை கண்டு கொண்டார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள சிசிரிவி கமரா மூலம் திருடனை அடையாளம் கண்டு கொண்டதையடுத்து மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருடன் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் திருடிய தங்க சங்கிலி புதைத்து வைத்திருந்த பற்றை காட்டிற்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட போது அங்கு அது கிடைக்கவில்லை எனவும் திருடிய பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுவர் எனவும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு.தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.