ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் மரணங்கள் ஏற்படும் அபாயம்
வேகமாக பரவி வரும் டெல்டா வகையைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் உட்பட அத்தியாவசிய சுகாதார பரிந்துரைகளை செயல்படுத்தப்படாவிட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 30,000 பேர் கொரோனா தொற்றுநோயால் இறக்க நேரிடும் என தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இன்று நடத்திய ஊடக சந்திப்பில் மருத்துவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு ஒரு முக்கியமான நேரத்தில் நாங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம். தற்போது, 3 லட்சத்து 45 ஆயிரம் கொரோனா தொற்று மற்றும் 5 ஆயிரத்து 620 மரணங்கள் பதிவாகியுள்ளன.
37 ஆயிரத்து 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த வாரம் சராசரியாக 115 பேர் இறந்தனர். ஒரு வாரத்தில் ஆயிரத்து 156 பேர் இறந்தனர். கடந்த ஒரு மாதமாக, பல்வேறு மருத்துவ சங்கங்கள், நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு என்பன நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாக அரசாங்கத்திடம் கூறியுள்ளன.
எனவே, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எமது நாடும் ஏப்ரல் முதல் மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்று தொற்று நோய் தீவிரமடைந்துள்ளது.
இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். தினமும் குறைந்தது 100 இறப்புகள் என எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஆனால் இது 4 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கலாம்.
முதியவர்களில் 75 வீதமானோர் இறக்கலாம். இந்த நிலைமையானது சாதாரணமான விடயமல்ல. மக்கள்தொகையில் 13 வீதமானவர்கள் மாத்திரமே 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தில் நாங்கள் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தினோம். பல ஆண்டுகளாக பணியாற்றிய உலக சுகாதார அமைப்பின் அனைத்து நிபுணர்களும் இதில் கலந்துக்கொண்டனர்.
நாங்கள் தயாரித்த அறிக்கையை சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தீவிரமான சூழ்நிலையைக் குறிப்பிட்டு அந்த அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் 30 ஆயிரம் மரணங்கள் ஏற்படலாம்.
ஒக்டோபர் மாதத்திற்குள் தற்போது காணப்படும் 3 ஆயிரம் இறப்புகள் 6 ஆயிரமாக அதிகரிக்கலாம். சரியான முடிவுகள் செயற்படுத்தப்படாவிட்டால் இது போன்ற கடுமையான அனர்த்தம் ஏற்படக் கூடும்” எனவும் நிஹால் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.




