நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம்
''நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும்'' அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (09.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இனவாத நிகழ்ச்சி நிரல்
''தற்போது இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளானது அரசின் சர்வாதிகாரம் வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் காலங்காலமாக சிங்கள இனவெறி பிடித்த அரசுகளால் அடக்கியொடுக்கப்பட்டுள்ளோம்.
ஆரம்ப காலந்தொட்டு இனவாத நிகழ்ச்சி நிரலில் நாடு செயற்பட்டு தமிழர்களின் அடையாளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் குருந்தூர்மலையை தொல்லியற் திணைக்களம் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட போது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையிலுள்ள போதும் விகாரையை கட்டி முடித்துள்ளனர்.
இதேவேளை கின்னியாவிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருக்கும் வேளையில் அங்கு பாதையோரங்களில் திட்டமிட்டு சிங்கள நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் திருக்கடலூரில் பாதுகாப்பு படையினரின் மறைமுக உந்தலில் தமிழர்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தி சுதந்திரத்திற்கு அச்சம் ஏற்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் ஒடுக்குமுறை
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நெல் வயலிலே திட்டமிடப்பட்டு 30க்கு மேற்பட்ட மூட்டைகள் பெரும்பான்மையினரால் அபகரித்துச் செல்லப்பட்டன. ஆனால் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த விடயங்களை கையிலெடுத்து கண்டனங்களைத் தெரிவித்தால் அது அரசிற்கு முட்டுகட்டையாக இருக்கும். அதனை தடுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் எமது குரல்களை ஒடுக்க முயல்கின்றனர்.
இந்த சட்டத்தை ஜனநாயக நாட்டிலே ஜனநாயகத்திற்கு முரணாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சட்டத்தை அனைத்து தரப்பும் எதிர்க்க வேண்டும் என்பதுடன் அரச தலைவரும் இதை குறித்து மீள்பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.
எமக்கு பல கட்சிகள், பல தலைவர்கள் இருந்தாலும். அவர்கள் பல்வேறு தரப்பாக பிரிந்துள்ளனர். தமிழர்களுக்கு இறுதியாக உள்ள ஆயுதம் ஒற்றுமை மட்டுமே. தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்கள் மண்ணிலும் மக்களிலும் கருணை கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடற்தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்
சில தினங்ளுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு கச்சத்தீவை மீளப்பெற வேண்டுமென அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஊடகவியளாளர்கள் வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,
ஸ்டாலின் இளம் தலைவராக காணப்படுவதால் பழைய வரலாறுகள் பற்றி தெரியாது.
1974 இல் இலங்கை - இந்திய பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்குமிடையிலான நல்லிணக்க உறவை திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலே இந்திரா காந்தியால் இலங்கைக்கு தன்நலம் கருதி குறித்த பேச்சுவார்த்தை விட்டுக்கொடுக்கப்பட்டது.
கடற்தொழிலாளர்கள் பல தடவை இலங்கை அரசால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதான இடம் வகித்தாலும் அவரைக் காப்பாற்றவே தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர்.
கிராம எழுச்சி திட்ட
நிதியை சட்டைப் பைக்குள்ளே போட்டுக்கொண்டு தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள்
அவர்களுக்கு ஆதரவளித்த நிலையே காணப்பட்டது‘‘ என்றார்.