இலங்கையில் கடன் நெருக்கடி இல்லை: வாதிடும் சீன அறிஞர்கள்!
இலங்கையில் கடன் நெருக்கடி இல்லை என சீன அறிஞர்கள் வாதிடுகின்றனர். இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறை நிலவுகிறதே தவிர, கடன் நெருக்கடி இல்லை என்று சீன சமூக அறிவியல் கல்வியகத்தின் இணைப் பேராசிரியரான ஜியா டுகியாங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“அதிக வட்டிக் கடன்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற சாத்தியமற்ற திட்டங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் அவர் கருத்துக்கூறவில்லை.
அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கான காரணம்
குறிப்பாக, நாட்டின் பலவீனமான பொருளாதார கட்டமைப்பு, அரசாங்கத்தின் தவறான கொள்கைகள், சவால்களை சமாளிக்க அதன் இயலாமை, அத்துடன் பாதகமான வெளிப்புற காரணிகள் என்பனவே அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை 59.67 வீதமாக இருந்தது. தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் 26.25 மற்றும் 8.36வீதமாக மட்டுமே இருந்தன. எனவே இலங்கையின் தொழில்துறை கட்டமைப்பு தீவிர வெளிப்புற அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கவில்லை.
கோவிட் தொற்றுநோய் சுற்றுலாத் துறைக்கு கடுமையான தாக்கத்தை கொடுத்த பிறகு, ரஷ்யா-உக்ரைன் மோதலால் பணப்பயிர்களின் ஏற்றுமதி திடீரென குறைந்த பிறகு, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறையத் தொடங்கியது.
சீனாவின் உறுதி
இதேவேளை நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தன்னால் இயன்றதை சீனா மேற்கொள்ளும்” என்று அவர் உறுதியளித்தார்.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரியில் இலங்கையின் கடன் தொடர்பில் கருத்துரைத்திருந்த சீனாவின் சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் தலைவர் ஃபூ சியாவோகியாங்கும், இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையே நிலவுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.